பெருங்குடியில் கடத்தப்பட்ட சிறுவன், திருவேற்காட்டில் மீட்பு குழந்தையை வளர்க்க ஆசைப்பட்டு கடத்தியதாக கைதானவர் வாக்குமூலம்


பெருங்குடியில் கடத்தப்பட்ட சிறுவன், திருவேற்காட்டில் மீட்பு குழந்தையை வளர்க்க ஆசைப்பட்டு கடத்தியதாக கைதானவர் வாக்குமூலம்
x
தினத்தந்தி 11 Jan 2018 5:45 AM IST (Updated: 11 Jan 2018 5:18 AM IST)
t-max-icont-min-icon

பெருங்குடியில் கடத்தப்பட்ட சிறுவன், திருவேற்காட்டில் மீட்கப்பட்டான். குழந்தையை வளர்க்க ஆசைப்பட்டு கடத்தியதாக கைதான வாலிபர், போலீசாரிடம் வாக்குமூலம் அளித்து உள்ளார்.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த பெருங்குடி அம்பேத்கர் புரட்சி நகர் என்.எஸ்.கே. தெருவைச் சேர்ந்தவர் குருசாமி (வயது 34). இவருடைய மனைவி பிரேமலதா. இவர்களுக்கு குகன் (5), விஷ்வா (2½) என 2 மகன்களும், விஷாலி (1) என்ற மகளும் உள்ளனர்.

கடந்த 25–ந் தேதி இரவு வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் விஷ்வா, திடீரென மாயமானான். பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் இதுபற்றி துரைப்பாக்கம் போலீசில் குருசாமி புகார் செய்தார்.

அதன்பேரில் அடையாறு துணை கமி‌ஷனர் ரோகித்நாதன் தலைமையில் துரைப்பாக்கம் உதவி கமி‌ஷனர் அய்யப்பன், இன்ஸ்பெக்டர் சீனிவாசன் ஆகியோர் அடங்கிய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

பெருங்குடி, தரமணி ஆகிய பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை தனிப்படை போலீசார் ஆராய்ந்தனர். அதில் வீட்டின் முன் விளையாடிக்கொண்டு இருந்த சிறுவன் விஷ்வாவை, வாலிபர் ஒருவர் கடத்திச்செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை வைத்து போலீசார் கடத்தல் ஆசாமியையும், சிறுவனையும் தேடி வந்தனர். ஆனால் அதில் எந்த துப்பும் கிடைக்கவில்லை.

இதையடுத்து போலீசார், சிறுவன் விஷ்வா கடத்தப்படுவதற்கு முன்பு அந்த பகுதியில் யாராவது சந்தேகப்படும்படியாக நடமாடுகிறார்களா? என்பதை அறிய அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை மீண்டும் ஆய்வு செய்தனர்.

அப்போது சிறுவன் கடத்தப்பட்ட 25–ந் தேதி அதிகாலையில் சந்தேகப்படும்படியாக 2 பேர் மோட்டார் சைக்கிளில் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. அதில் ஒருவர், சிறுவனை கடத்திச்சென்ற நபர் போன்று தோற்றம் அளித்தார்.

இதனால் போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவான மோட்டார் சைக்கிள் பதிவெண்ணை வைத்து விசாரித்தனர். அதில் அந்த மோட்டார் சைக்கிள் பெருங்குடி கல்லுக்குட்டை பகுதியை சேர்ந்த மகேந்திரன் என்பவருக்கு சொந்தமானது என தெரிந்தது. அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

அதில் அவர், ‘‘மோட்டார் சைக்கிளில் தன்னுடன் வந்தவர் தனது நண்பர் மாணிக்கம் (28). திருவேற்காட்டை சேர்ந்த அவர், தனியார் அட்டை கம்பெனியில் வேலை செய்து வருகிறார். அவருடைய தாயார், கல்லுக்குட்டை பகுதியில்தான் வசித்து வருகிறார். தாயாரை பார்க்க அவர் கல்லுக்குட்டைக்கு வந்த போது, நாங்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் மது அருந்த சென்றோம்’’ என்று கூறினார்.

அதைதொடர்ந்து தனிப்படை போலீசார், திருவேற்காட்டில் உள்ள மாணிக்கம் வீட்டுக்கு சென்றனர். அங்கு கடத்தப்பட்ட சிறுவன் விஷ்வாவுடன், மாணிக்கம் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். சிறுவனை பத்திரமாக மீட்ட போலீசார், மாணிக்கத்தை கைது செய்தனர்.

கைதான மாணிக்கம், போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலம் வருமாறு:–

எனக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. எனக்கு குழந்தைகள் என்றால் ரொம்ப பிடிக்கும். குழந்தைகளை வளர்க்க ஆசைப்பட்டேன். கடந்த 25–ந் தேதி எனது தாயாரை பார்க்க கல்லுக்குட்டைக்கு சென்ற நான், அங்கு எனது நண்பர் மகேந்திரனுடன் மது குடிக்க சென்றேன்.

அப்போது சிறுவன் விஷ்வாவை பார்த்தேன். அவனை பார்த்த உடன் எனக்கு ரொம்ப பிடித்து விட்டது. அவனை நானே வளர்க்க ஆசைப்பட்டேன். இதனால் வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்த அவனை, எனது வீட்டுக்கு அழைத்து வந்து விட்டேன்.

குழந்தையை வளர்க்க வேண்டும் என்ற ஆசையில்தான் நான், சிறுவனை கடத்தி வந்தேன். குழந்தையை கடத்தி விற்கவேண்டும் என்ற எண்ணத்தில் இல்லை. இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து கைதான மாணிக்கம் மற்றும் மீட்கப்பட்ட சிறுவன் விஷ்வா இருவரையும் தனிப்படை போலீசார் துரைப்பாக்கம் போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். அங்கு சிறுவனை அவர்களின் பெற்றோரிடம் துணை கமி‌ஷனர் ரோகித்நாதன் ஒப்படைத்தார்.

கண்ணீர் மல்க மகனை வாரி அணைத்துக்கொண்ட தாய் பிரேமலதா, மகன் விஷ்வாவுக்கு முத்த மழை பொழிந்தார். கண்ணீருடன் அவர் போலீசாருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.

மேலும் பிரேமலதா கூறும்போது, ‘‘கடந்த 25–ந் தேதி முதல் எங்கள் மகனை காணாமல் நாங்கள் தவியாய் தவித்து இருந்தோம். அவனை போலீசார் கண்டுபிடித்து கொடுப்பார்களா?, அவன் எங்கிருக்கிறானோ?. சாப்பிட்டானா, தூங்கினானா? என தெரியவில்லையே என்று துடித்து விட்டோம். போலீசார் எப்படியோ கஷ்டப்பட்டு தேடி எனது மகனை மீட்டு எங்களிடம் ஒப்படைத்து விட்டனர். அவர்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்’’ என்றார்.

துரிதமாக செயல்பட்டு சிறுவனை மீட்ட தனிப்படை போலீசாரை துணை கமி‌ஷனர் ரோகித்நாதன் வெகுவாக பாராட்டினார்.


Next Story