அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த குழந்தை இறந்தது ; உறவினர்கள் முற்றுகை


அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த குழந்தை இறந்தது ; உறவினர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 12 Jan 2018 4:30 AM IST (Updated: 12 Jan 2018 2:58 AM IST)
t-max-icont-min-icon

திண்டல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவினாசி தம்பதிக்கு பிறந்த குழந்தை இறந்தது. முறையாக சிகிச்சை அளிக்கவில்லை எனக்கூறி உறவினர்கள் முற்றுகையிட்டனர்.

ஈரோடு,

திருப்பூர் மாவட்டம் அவினாசியை சேர்ந்தவர் வடிவேலு. தையல் தொழிலாளி. இவருடைய மனைவி கன்னியம்மாள் (வயது 23). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவர் ஈரோடு திண்டல் கே.ஏ.எஸ்.நகரில் உள்ள தனது தாய் வீட்டில் தங்கி இருந்தார். எனவே திண்டலில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவர் சிகிச்சை பெற்று வந்து உள்ளார். அவருக்கு 12-ந் தேதி (அதாவது இன்று) குழந்தை பிறக்கும் என்று டாக்டர் தேதி குறிப்பிட்டு இருந்தார்.

இந்தநிலையில் பிரசவ வலி ஏற்பட்டதால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று முன்தினம் கன்னியம்மாள் சிகிச்சைக்காக சேர்ந்தார். நேற்று அதிகாலை 2 மணி அளவில் பிரசவ வலி அதிகமாக ஏற்பட்டது. அப்போது ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் பணியில் இல்லை. ஒரு செவிலியர் மட்டும் பணியில் இருந்தார். எனவே அவரும், உதவியாளர் ஒரு பெண்ணும் சேர்ந்து பிரசவம் பார்த்தனர். இதில் கன்னியம்மாளுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் பிறந்த குழந்தை திடீரென இறந்துவிட்டது.

அதன்பின்னர் பணியில் இருந்த செவிலியர், குழந்தை இறந்த தகவலை உறவினர்களிடம் தெரிவித்தார். இதை கேட்ட உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், கன்னியம்மாளின் உடல் நிலையும் மோசமானது. இதையடுத்து அவர் ஆம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இந்தநிலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர் முறையான சிகிச்சை அளிக்காததால் குழந்தை இறந்துவிட்டதாக கூறி உறவினர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

அதிகாலை 2.30 மணிஅளவில் குழந்தை பிறந்து உள்ளது. 3.15 மணிஅளவில் குழந்தை இறந்த விவரத்தை எங்களிடம் செவிலியர் தெரிவித்தார். ஆபத்தான நிலையில் முறையாக சிகிச்சை அளிக்க டாக்டர் யாரும் பணியில் இல்லை. செவிலியர் தவறான சிகிச்சை அளித்ததால் குழந்தை இறந்துவிட்டது. மேலும், கன்னியம்மாளும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இது குறித்து ஈரோடு மாவட்ட சுகாதார நலப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பாலுசாமியிடம் கேட்டபோது, “திண்டல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் ஒருவர் நியமிக்கப்பட்டு உள்ளார். எனவே இரவு நேரத்தில் செவிலியர்கள் சிகிச்சை அளிப்பார்கள்.

அப்போது அவசர உதவி ஏற்பட்டால் டாக்டர் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிப்பார். அல்லது ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைப்பார்கள். கன்னியம்மாளுக்கு சுக பிரசவம் ஆகி உள்ளது. அப்போது குழந்தை வெளியே வருவதில் ஏற்பட்ட பிரச்சினையால் குழந்தை இறந்துவிட்டது. இதுதொடர்பாக மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது”, என்றார்.


Next Story