தள்ளிவிட்டதில் 1½ மாத குழந்தை சாவு: வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை


தள்ளிவிட்டதில் 1½ மாத குழந்தை சாவு: வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை
x
தினத்தந்தி 12 Jan 2018 3:45 AM IST (Updated: 12 Jan 2018 2:59 AM IST)
t-max-icont-min-icon

பாட்டியிடம் இருந்த போது தள்ளிவிட்டதில் 1½ மாத குழந்தை இறந்தது தொடர்பாக வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து நாகர்கோவில் கோர்ட்டு நேற்று தீர்ப்பு அளித்தது.

நாகர்கோவில்,

குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகேயுள்ள கல்லடிதோப்பை சேர்ந்தவர் நாகேந்திரன். அவருடைய மனைவி சரஸ்வதி (வயது 51). நாகேந்திரன் குடும்பத்துக்கும், அதே பகுதியை சேர்ந்த ஜாண் பிரிட்டோ (35) என்பவருக்கும் இடையே நிலம் தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது. இதனால் ஜாண் பிரிட்டோ அடிக்கடி நாகேந்திரன் குடும்பத்தினருடன் தகராறு செய்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 23-12-2012 அன்று மாலையில் சரஸ்வதி தன் பேத்தியான 1½ மாத குழந்தை அர்ஷாவை கையில் வைத்திருந்தார். அப்போது, ஜாண் பிரிட்டோ திடீரென வீட்டுக்குள் வந்து சரஸ்வதியிடம் தகராறு செய்தார். பச்சிளம் குழந்தை என்றுகூட பாராமல் அர்ஷாவை கீழே தள்ளி விட்டார். இதில் குழந்தைக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

5 ஆண்டு சிறை

அதைத் தொடர்ந்து சிகிச்சைக்காக அர்ஷாவை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே குழந்தை பரிதாபமாக இறந்தது.

இதுபற்றி கொல்லங்கோடு போலீஸ் நிலையத்தில் சரஸ்வதி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜாண் பிரிட்டோவை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு நாகர்கோவிலில் உள்ள மகிளா கோர்ட்டில் நடந்தது. வழக்கை நீதிபதி ஜாண் ஆர்.டி.சந்தோஷம் விசாரித்து வந்தார்.

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது குற்றம் சாட்டப்பட்ட ஜாண் பிரிட்டோவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜாண் ஆர்.டி.சந்தோஷம் உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் மீனாட்சி ஆஜராகி வாதாடினார். 

Next Story