எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை அறிவிக்காததால் நடவடிக்கை கோரி வழக்கு


எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை அறிவிக்காததால் நடவடிக்கை கோரி வழக்கு
x
தினத்தந்தி 12 Jan 2018 4:00 AM IST (Updated: 12 Jan 2018 2:59 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை அறிவிக்காததால் அவமதிப்பு நடவடிக்கை கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய சுகாதாரத்துறை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி கே.கே.ரமேஷ் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் தாக்கல் செய்த மனுவில், ‘தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க பெருந்துறை (ஈரோடு), செங்கல்பட்டு (காஞ்சிபுரம்), தோப்பூர் (மதுரை), செங்கிப்பட்டி (தஞ்சாவூர்), புதுக்கோட்டை (புதுக்கோட்டை) ஆகிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசுக்கு 31.10.2014-ல் பட்டியல் அனுப்பப்பட்டது. இந்த இடங்களை மத்திய குழு ஆய்வு செய்துள்ளது. இந்த 5 இடங்களில் எந்த இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்பதை மத்திய அரசு தான் அறிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

அறிவிக்கப்படவில்லை

விசாரணை முடிவில், “மத்திய குழு மேற்கண்ட 5 இடங்களிலும் ஆய்வு நடத்தி 2 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை தேர்வு செய்வது தொடர்பான அனைத்து பணிகளையும் 31.12.2017-க்குள் முடித்து எய்ம்ஸ் மருத்துவமனை எங்கு அமைக்கப்பட உள்ளது என்ற விவரத்தை 1.1.2018 அன்று மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று கடந்த ஆகஸ்டு மாதம் நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் ஆகியோர் உத்தரவிட்டனர்.

ஆனால் கோர்ட்டு உத்தரவின்படி உரிய நாளில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக மத்திய அரசு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதனையடுத்து ஐகோர்ட்டு உத்தரவை குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்றாததால் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் பிரிதீசுதன் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி கே.கே.ரமேஷ் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

நோட்டீஸ்

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு தரப்பில் வக்கீல் பால்பாண்டி ஆஜரானார்.

பின்னர் இந்த வழக்கு குறித்து மத்திய சுகாதாரத்துறை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

Next Story