மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை ஏராளமானோர் குவிந்தனர்


மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை ஏராளமானோர் குவிந்தனர்
x
தினத்தந்தி 12 Jan 2018 4:30 AM IST (Updated: 12 Jan 2018 3:00 AM IST)
t-max-icont-min-icon

மதுரை பாலமேடு மற்றும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அலங்காநல்லூர்,

மதுரை பாலமேட்டில் வருகிற 15-ந்தேதி ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இதையொட்டி மஞ்சமலை சுவாமி ஆறு திடலில் உள்ள வாடிவாசல் வர்ணம் பூசி தயார் நிலையில் உள்ளது. இதுபோல், பார்வையாளர்கள் அமரும் மேடை, தடுப்பு வேலி கம்புகளும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், பாலமேடு பேரூராட்சி அலுவலக வளாகம் முன்பு மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது. இதில் 1000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்துகொண்டு மருத்துவ பரிசோதனை செய்துகொண்டனர். அப்போது அவர்களது வயது, உயரம், எடை, ரத்த அழுத்தம், உடல் தகுதி, மச்ச அடையாளங்கள் உள்ளிட்ட பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வளர்மதி மேற்பார்வையில் 30-க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர் பரிசோதனையில் ஈடுபட்டிருந்தனர். வாடிப்பட்டி தாசில்தார் பார்த்திபன் உள்ளிட்ட வருவாய்துறை அலுவலர்கள் புகைப்படம் ஒட்டிய விண்ணப்பப்ப படிவங்களை ஆய்வு செய்தனர்.

அவனியாபுரம்

இதே போல் அவனியாபுரத்தில் 14-ந்தேதி ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இதற்காக அங்கு வாடிவாசல், பார்வையாளர்கள் அமரும் இடம் ஆகியவை அமைக்கப்பட்டு வருகிற. இதில் கலந்து கொள்ளும் இளைஞர்களுக்கான மருத்துவ பரிசோதனை திருப்பரங்குன்றத்தில் உள்ள ஒரு தனியார் மகாலில் நடைபெற்றது. சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் இதில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அதிகம் பேர் வந்துள்ளதால் பரிசோதனை செய்யும் பணி நாளையும் நடைபெறும். இதே போல் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு கால்நடைத் துறை துணை இயக்குனர் ராமர் தலைமையில் 12 பேர் பரிசோதனை செய்தனர். 

Next Story