தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டில் 1½ லட்சம் பேரின் ஓட்டுனர் உரிமம் தற்காலிகமாக ரத்து


தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டில் 1½ லட்சம் பேரின் ஓட்டுனர் உரிமம் தற்காலிகமாக ரத்து
x
தினத்தந்தி 12 Jan 2018 4:15 AM IST (Updated: 12 Jan 2018 3:00 AM IST)
t-max-icont-min-icon

தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டில் 1½ லட்சம் பேரின் ஓட்டுனர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை ஆணையாளர் தயானந்த் கட்டாரியா அறிவுரை வழங்கினார்.

கோவை,

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், சாலை பாதுகாப்பு தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ஹரிகரன் முன்னிலை வகித்தார். தமிழக அரசின் முதன்மை செயலாளரும், போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்புத்துறை ஆணையாளருமான தயானந்த் கட்டாரியா ஆய்வு நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் பெருகி வரும் வாகன பெருக்கத்திற்கேற்றவாறு முறையான திட்டமிடலுடன் கூடிய சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டிருந்தாலும், தினந்தோறும் வாகன விபத்துகள் நடைபெறுகிறது. இதன் மூலம் பெரும் பொருள் இழப்புகள் மற்றும் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. இவற்றினை பெருமளவில் குறைக்கவே தமிழக முதல்-அமைச்சர் பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்.

தமிழகத்தில் 2016-ம் ஆண்டை காட்டிலும், 2017-ம் ஆண்டில் சாலை விபத்தில் ஆயிரத்து 61 இறப்புகள் குறைந்துள்ளது. மேலும், 5,869 விபத்துகள் குறைந்துள்ளன. கடந்த ஆண்டில் குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், செல்போனில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுதல், அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், சாலை விதிகளை மீறுதல் போன்ற பல்வேறு காரணங்களின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 54 ஆயிரத்து 694 பேரின் வாகன ஓட்டுனர் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

சாலை பாதுகாப்பில் நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்து துறை, காவல்துறை உள்ளிட்டத்துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். சுகாதாரத்துறையின் மூலம் கனரக வாகன ஓட்டுனர்களுக்கு அம்மா ஆரோக்கியா திட்டத்தின் மூலம் முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளலாம். உயிரிழப்பு விபத்தினை ஏற்படுத்திய வாகன ஓட்டுனர்களுக்கு மனநல பயிற்சி அளிக்கப்படுவது கட்டாயம்.

மேலும், கோவை மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாநில நெடுஞ்சாலைத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் என்னென்ன? சாலைகளை அவ்வப்போது கண்காணித்து விபத்துகள் நேராத வண்ணம் தேவையான முன்னறிவிப்பு பலகை மற்றும் ஒளி தரும் வில்லைகள் ஆகியவற்றை தேவையான இடங்களில் வைக்க வேண்டும். அதேபோல் மாநில நெடுஞ்சாலைத்துறையின் மூலம் சாலையில் வாகன ஓட்டுனர்களுக்கு தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விளம்பர பதாகைகள் அதிக அளவில் வைத்திடலாம். சாலைகளில் ஏற்படும் பாதிப்புகளை அவ்வப்போது உடனுக்குடன் சரிசெய்திட வேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் விபத்துகளைப் பார்க்கும் போது அதை குறைப்பதற்கு என்ன வழிகளை மேற்கொள்ள வேண்டும் என திட்டமிட்டு செயலாற்ற வேண்டும். அவ்வப்போது வட்டார போக்குவரத்துத்துறையின் மூலம் வாகனத்தணிக்கை செய்வது அவசியம். பொதுமக்களுக்கு தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சினிமா தியேட்டர்கள் மற்றும் நகர்பகுதி மற்றும் ஊராட்சி பகுதிகளில் குறுந்தகடுகள் மூலமாக சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறும்படங்களை திரையிட்டு சாலை விதிமுறைகளின் அவசியம் குறித்து விளக்கலாம்.

போலீஸ் துறையின் மூலம் வாகன ஓட்டிகளுக்கு தக்க விழிப்புணர்வை ஏற்படுத்தி, மது அருந்தாமல் வாகனம் ஓட்ட வேண்டும். வாகன ஓட்டிகளுக்கு லைசென்சு கட்டாயம். இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிய வேண்டும். மேலும், ஆல்பா திட்டத்தின் கீழ் சாலை விபத்துகளில் அடிபட்டவர்களுக்கு அவசர கால மீட்பு மற்றும் முதல் உதவி பணிகளுக்காக 20 இருசக்கர வாகனங்களில் 40 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி எதிர்காலத்தில் முற்றிலும் விபத்துகளை தவிர்க்கும் வண்ணம் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த ஆய்வு கூட்டத்தில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பெரியய்யா, மாநகராட்சி தனி அதிகாரி விஜயகார்த்திகேயன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பா.மூர்த்தி, பொள்ளாச்சி சப்-கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், துணை கமிஷனர் சுஜித்குமார், கோட்ட வருவாய் அதிகாரிகள் மதுராந்தகி, சின்னசாமி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story