தனியாரிடம் ஒப்படைக்க எதிர்ப்பு: கூட்டுறவு சர்க்கரை ஆலை ஊழியர்கள் உண்ணாவிரதம்


தனியாரிடம் ஒப்படைக்க எதிர்ப்பு: கூட்டுறவு சர்க்கரை ஆலை ஊழியர்கள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 12 Jan 2018 3:50 AM IST (Updated: 12 Jan 2018 3:51 AM IST)
t-max-icont-min-icon

தனியாரிடம் ஒப்படைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுவை கூட்டுறவு சர்க்கரை ஆலை ஊழியர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.

புதுச்சேரி,

புதுவை லிங்காரெட்டிபாளையத்தில் கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. நஷ்டத்தில் இயங்கும் இந்த ஆலையை தனியாரிடம் ஒப்படைப்பது தொடர்பாக புதுவை அமைச்சரவையில் ஆலோசனை தெரிவிக்கப்பட்டது.

அரசின் இந்த முடிவுக்கு அரசியல் கட்சிகள், அமைப்புகள் மற்றும் பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் புதுவை சட்டமன்ற எம்.எல்.ஏ.க்கள் குழு சமீபத்தில் அங்கு சென்று ஆய்வு நடத்தியது. ஆலையை தனியாருக்கு விடக்கூடாது தொடர்ந்து அரசே தொடர்ந்து நடத்த வேண்டும் என்று விவசாயிகளும், கரும்பு ஆலை ஊழியர்களும் கோரிக்கை விடுத்தனர்.

இந்தநிலையில் கூட்டுறவு சர்க்கரை ஆலையை தனியாருக்கு தாரைபார்ப்பதை தவிர்ப்பதோடு நிலுவையில் உள்ள 10 மாத சம்பளம், அறிவிக்கப்பட்ட போனஸ், சம்பள பிடித்தங்களை உடனடியாக வழங்கவேண்டும், ஐ.ஏ.எஸ். அதிகாரியை புதிய மேலாண் இயக்குனராக நியமிக்கவேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி புதுவை சுதேசி மில் அருகே அனைத்து தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பினர் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர்.

அனைத்து தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு தலைவர் முருகானந்தம் தலைமை தாங்கினார். டி.பி.ஆர்.செல்வம் எம்.எல்.ஏ., மாநில பாரதீய ஜனதா கட்சி தலைவர் சாமிநாதன் ஆகியோர் வாழ்த்திப் பேசினார்கள். உண்ணாவிரதத்தில் கூட்டமைப்பு நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.



Next Story