சென்னைக்கு விமானத்தில் ரூ.11 லட்சம் தங்கம் கடத்தியவர் சிக்கினார்
மலேசியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் ரூ.11 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை கடத்தியவர் சிக்கினார். தங்கத்தை உருக்கி கம்பியாக மாற்றி பேனாவில் மறைத்து நூதன முறையில் அவர் கடத்தி வந்தது தெரியவந்தது.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு மலேசியாவில் இருந்து விமானம் ஒன்று வந்தது. இதில் வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர்.
அப்போது சென்னையை சேர்ந்த முகமது பாசித் (வயது 30) என்பவர் வந்தார். இவரது உடைமைகளை சோதனை செய்தபோது நிறைய பேனாக்கள் இருந்தன. அவை வழக்கத்திற்கு மாறாக அதிக எடையுடன் இருந்ததால் அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து அதிகாரிகள் அந்த பேனாக்களை பிரித்து பார்த்தனர். அப்போது தங்கத்தை உருக்கி கம்பி போல் மாற்றி பேனாவில் மறைத்து வைத்து நூதன முறையில் அவர் தங்கத்தை கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.
அவர் மொத்தம் ரூ.11 லட்சம் மதிப்புள்ள 386 கிராம் தங்கத்தை கடத்தி வந்தார். அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக முகமது பாசித்திடம் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story