கிராம உதவியாளரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
ஆவுடையார்கோவில் அருகே உள்ள மீமிசலை சேர்ந்தவர் கருப்பையா
கோட்டைப்பட்டினம்,
ஆவுடையார்கோவில் அருகே உள்ள மீமிசலை சேர்ந்தவர் கருப்பையா (வயது 45). இவர் மீமிசல் கிராம உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் சதீஷ் என்பவர் மீமிசல் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் அருகே ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சதீஷின் ஜெராக்ஸ் கடைக்கு வந்த 3 பேர் குடிபோதையில் சதீஷிடம் தகராறு செய்துள்ளனர். இது குறித்து அறிந்த கருப்பையா சம்பவ இடத்திற்கு சென்று தகராறில் ஈடுபட்டவர்களிடம் தட்டி கேட்டுள்ளார். அப்போது அவர்கள் அங்கு கிடந்த கட்டையை எடுத்து கருப்பையாவை தாக்கிவிட்டு, தப்பியோடிவிட்டனர். இதில் கருப்பையா படுகாயமடைந்து, மணமேல்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து மீமிசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.இந்நிலையில் கிராம உதவியாளர் கருப்பையாமீது தாக்குதல் நடத்தியவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்ட துணைத்தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் மீமிசல் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.