முத்தலாக் சட்டத்தை கொண்டு வந்தால் முஸ்லிம் பெண்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் காதர்மொய்தீன் பேட்டி


முத்தலாக் சட்டத்தை கொண்டு வந்தால் முஸ்லிம் பெண்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் காதர்மொய்தீன் பேட்டி
x
தினத்தந்தி 13 Jan 2018 4:45 AM IST (Updated: 13 Jan 2018 4:31 AM IST)
t-max-icont-min-icon

முத்தலாக் சட்டத்தை கொண்டு வந்தால் மத்திய அரசை கண்டித்து முஸ்லிம் பெண்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன் தெரிவித்தார்.

திருச்சி,

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டம் திருச்சி தில்லைநகரில் நேற்று நடந்தது. இதற்கு மகளிர் அணியின் தலைவி பேராசிரியர் தஸ்ரிப் ஜகான் தலைமை தாங்கினார். கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும் கட்சியின் தமிழ் மாநில மகளிர் அணி பொருளாளர் ‌ஷஸ்மினாஸ் நிஜாம் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன் கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில் முஸ்லிம் பெண்களின் வாழ்க்கையை பாழ்படுத்தும் முத்தலாக் சட்ட மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதனை தொடர்ந்து காதர் மொய்தீன் நிருபர்களிடம் கூறியதாவது:–

மத்திய அரசு கொண்டு வந்துள்ள முத்தலாக் சட்ட மசோதாவை எதிர்த்தும், தலாக் குறித்து முஸ்லிம்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாடு முழுவதும் கருத்தரங்கம் கட்சியின் மகளிர் அணி சார்பில் நடத்தப்படும்.மத்திய அரசு முஸ்லிம் அமைப்புகளிடம் கலந்து ஆலோசிக்காமல் மக்களவையில் முத்தலாக் சட்ட மசோதாவை நிறைவேற்றி விட்டது. ஆனால் மாநிலங்களவையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளின் எதிர்ப்பால் முத்தலாக் சட்ட மசோதா நிறைவேற்றப்படவில்லை. முத்தலாக் சட்டத்தை அவசர சட்டமாக மத்திய அரசு கொண்டு வந்தால், அதனை கண்டித்து முஸ்லிம் பெண்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்தப்படும்.

தற்போது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன் ஆகிய மூவரும் நாடகம் நடத்தி கொண்டு இருக்கிறார்கள். இந்த அரசு மூன்றாண்டுகளை நிறைவு செய்து முடித்ததுடன் இவர்கள் மூவரும் ஒன்றிணைந்து விடுவார்கள். இவர்களின் நாடகத்தின் மூலம் தமிழக மக்கள் தான் ஏமாந்து வருகிறார்கள். தமிழக அரசு தொடர்ந்து நீடிப்பது மக்களுக்கு கஷ்டத்தை தான் ஏற்படுத்தும்.

ஆண்டாள் வரலாறு குறித்து அமெரிக்க பல்கலைக்கழக ஆய்வாளரின் கருத்தை தான் கவிஞர் வைரமுத்து மேற்கோள் காட்டியிருக்கிறார். அது, அவரது சொந்த கருத்து கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story