அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு பெயர் பதிவு: மாடுபிடி வீரர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீஸ் தடியடி
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கு மாடுபிடி வீரர்கள் பெயர் பதிவு செய்தபோது நெரிசல் ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை ஒழுங்குபடுத்தினர்.
அலங்காநல்லூர்,
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு விழாவுக்காக வாடிவாசல், பார்வையாளர்கள் அமரும் இடம், 2 அடுக்கு தடுப்பு வேலி அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அலங்காநல்லூர் கோட்டை முனியசாமி வாடிவாசல் திடல், பாலமேடு மஞ்சமலை ஆற்றுத்திடலில் உள்ள வாடிவாசல் ஆகியவை வர்ணம் பூசப்பட்டு தயார் நிலையில் உள்ளன.
பாலமேட்டில் நாளை மறுநாளும் (15–ந் தேதி), அலங்காநல்லூரில் வருகிற 16–ந் தேதியும் ஜல்லிகட்டு நடைபெற உள்ளது. இதையொட்டி அலங்காநல்லூர் சமுதாய கூட வளாகத்தில் மாடுபிடி வீரர்களுக்கான பதிவு நடந்தது. கூட்டம் அதிக அளவு இருந்ததால், போலீசார் கூட்டத்தை ஒழுங்குபடுத்த தீவிர பணியாற்றினர்.
அப்போது திடீரென தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் போலீசார் லேசான தடியடி செய்து கூட்டத்தை ஒழுங்குபடுத்தினர்.
இதில் ஒருவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. பின்பு மாடுபிடி வீரர்கள் பதிவு தொடர்ந்து நடந்தது. சுமார் 1300–க்கும் மேற்பட்டவர்களுக்கு முன்பதிவு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. பாலமேட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காளைகளுக்கு முன்பதிவு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. வாடிப்பட்டி தாசில்தார் பார்த்திபன் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் தகுதியான வீரர்களுக்கு முன்பதிவு சான்றுகளை வழங்கினர்.
வட்டார மருத்துவர் வளர்மதி தலைமையிலான மருத்துவ குழுவினர் பதிவுக்கு முன்பு வீரர்களுக்கான உடல் தகுதிச் சான்றுகள் வழங்கினர்.