பொங்கல் விழாவை முன்னிட்டு பானைகள் - கரும்புகள் விற்பனை படுஜோர்


பொங்கல் விழாவை முன்னிட்டு பானைகள் - கரும்புகள் விற்பனை படுஜோர்
x
தினத்தந்தி 14 Jan 2018 4:00 AM IST (Updated: 14 Jan 2018 3:56 AM IST)
t-max-icont-min-icon

பொங்கல் விழாவையொட்டி தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பானைகள், கரும்புகள் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை படுஜோராக நடைபெற்றது.

தர்மபுரி,

தமிழர் திருநாளான பொங்கல் விழா போகி பண்டிகையுடன் நேற்று தொடங்கியது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) சூரியப்பொங்கலும், நாளை(திங்கட்கிழமை) மாட்டுப்பொங்கல் விழாவும், நாளை மறுநாள்( செவ்வாய்க்கிழமை) காணும் பொங்கல் விழாவும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாரச்சந்தைகள், மார்க்கெட்டுகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொங்கல் பண்டிகைக்கு தேவையான பொருட்கள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டு இருந்தது.

பொங்கல் பண்டிகைக்கு தேவையான பானைகள் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடந்த சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டது. தர்மபுரி நகரில் பெரியார் சிலையை சுற்றி உள்ள பகுதிகளில் ரூ.30 முதல் ரூ.300 வரையிலான பல்வேறு விலைகளில் பொங்கல் பானைகள் விற்பனை செய்யப்பட்டன. பொங்கல் பானைகளை வாங்க பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டினார்கள்.

கரும்பு-மஞ்சள்

பொங்கல் விழாவில் முக்கிய இடம் பெறும் கரும்பு விற்பனையும் படுஜோராக நடைபெற்றது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது தற்போது விலை சற்று அதிகமாக இருந்தது. ஒரு ஜோடி கரும்பு ரகத்திற்கு ஏற்ப ரூ.60 முதல் ரூ.110 வரை என்ற விலைகளில் விற்பனை செய்யப்பட்டது. இதேபோன்று மஞ்சள் குலை ரூ. 20 முதல் ரூ.60 வரை பல்வேறு விலைகளில் விற்கப்பட்டது. வெல்லம், கோலப்பொடிகள், பூஜை பொருட்கள், கயிறுகள், மாட்டு கொம்புகளுக்கு தீட்டப்படும் வர்ணம் மற்றும் ஆடுகளின் விற்பனையும் படுஜோராக நடைபெற்றது. பொதுமக்கள், விவசாயிகள் அந்தந்த பகுதிகளில் கூடிய வாரச்சந்தை மற்றும் சாலையோரம் வைக்கப்பட்டு இருந்த பொங்கல் பொருட்களை கூட்டம், கூட்டமாக வந்து வாங்கி சென்றனர்.

ஆடுகள் விற்பனை

மாவட்டத்தில் உள்ள வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் தர்மபுரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், வியாபாரிகள் ஆடுகளை போட்டி போட்டு வாங்கி சென்றனர். பொங்கல் பண்டிகையையொட்டி சமையலுக்கு அவரை, பூசணி, பரங்கிக்காய், மொச்சை கொட்டை உள்ளிட்ட காய்கறிகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுவது வழக்கம். இதன் காரணமாக தர்மபுரியில் உள்ள உழவர் சந்தை காய்கறி சந்தைகள், காய்கறி கடைகளில் விற்பனை அதிகரித்தது. தர்மபுரி சந்தை அருகே நேற்று சாலையோரங்களில் ஆங்காங்கே கடைகள் அமைக்கப்பட்டு அனைத்து விதமான காய்கறிகளும் விற்பனை செய்யப்பட்டன. மஞ்சள் பூசணி உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் வழக்கத்தை விட சற்று அதிகரித்தது.இதேபோன்று மாவட்டத்தின் முக்கிய நகரங்களான பென்னாகரம், பாலக்கோடு, காரிமங்கலம், கம்பைநல்லூர், மொரப்பூர், பொம்மிடி, கடத்தூர், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், பாப்பாரப்பட்டி, நல்லம்பள்ளி, ஏரியூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பொங்கல் பொருட்களின் விற்பனை படுஜோராக நடைபெற்றது. 

Next Story