குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு


குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 14 Jan 2018 4:00 AM IST (Updated: 14 Jan 2018 3:56 AM IST)
t-max-icont-min-icon

மத்தூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ளது களர்பதி. இங்கு 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த பகுதி மக்களுக்கு மஞ்சமேடு தென்பெண்ணை ஆற்றில் இருந்து நாகனூர் கிராமத்திற்கு குழாய் மூலம் தண்ணீர் கொண்டு சென்று அதை தொட்டியில் ஏற்றி வினியோகம் செய்யப்படுகிறது.

அவ்வாறு தண்ணீர் கொண்டு செல்லும் பிரதான குழாயில் இருந்து ஆங்காங்கே சிலர் குழாய் அமைத்து தங்கள் வீடுகளுக்கு பயன்படுத்துகிறார்கள். இதனால் தொட்டியில் போதிய தண்ணீர் ஏறுவதில்லை என கூறப்படுகிறது. இதனால் களர்பதி மக்களுக்கு சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.

சாலை மறியல்

இது குறித்து அவர்கள் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த தர்மபுரி - திருப்பத்தூர் சாலையில் களர்பதியில் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலிக்குடங்களுடன் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த மத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினார்கள். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப் பட்டது. 

Next Story