தஞ்சை அருகே வெளிநாட்டினர் பொங்கல் வைத்து கொண்டாட்டம்


தஞ்சை அருகே வெளிநாட்டினர் பொங்கல் வைத்து கொண்டாட்டம்
x
தினத்தந்தி 14 Jan 2018 4:32 AM IST (Updated: 14 Jan 2018 4:32 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை அருகே வெளிநாட்டினர் பொங்கல் வைத்து கொண்டாடியதோடு, பானையை உடைத்து இளவட்ட கல்லை தூக்கி மகிழ்ந்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சையை அடுத்த நாஞ்சிக்கோட்டையில் பொங்கல் விழா நேற்று நடைபெற்றது. சுற்றுலா வளர்ச்சிக்குழுமம் மற்றும் கலைஆயம் சார்பில் நடந்த இந்த விழாவில் அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, பிரேசில் போன்ற பல்வேறு நாடுகளை சேர்ந்த 75 சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக நாஞ்சிக்கோட்டை கிராமத்துக்கு வந்த அவர்களுக்கு தமிழ்பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. ஒவ்வொருவருக்கும் மாலை அணிவித்து, நெற்றியில் திலகமிடப்பட்டது. பின்னர் அங்கு பொங்கல் வைக்கப்பட்டது. இதில் வெளிநாட்டினர் கலந்து கொண்டு பொங்கல் வைத்து கொண்டாடினர்.

கயிறு இழுத்தல்

பின்னர் அவர்கள் அங்கு நடந்த புலியாட்டம், மயிலாட்டம், காளியாட்டம், கோலாட்டம், சிலம்பாட்டம், காளையாட்டம், அய்யனார்சாமியாட்டம், கபடி, வாள்வீச்சு போன்றவற்றை கண்டுகளித்தனர். இதேபோல் பானை உடைத்தல், இளவட்ட கல்தூக்குதல் போட்டிகளும் நடந்தன. இதில் வெளிநாட்டை சேர்ந்தவர்களும் பங்கேற்றனர். இளவட்ட கல் தூக்கிய வெளிநாட்டினருக்கு ரூ.100 அன்பளிப்பு வழங்கப்பட்டது. பின்னர் கயிறு இழுக்கும் போட்டி நடைபெற்றது. ஒரு புறம் வெளிநாட்டை சேர்ந்த ஆடவர்களும், மறுபுறம் தஞ்சை பகுதியை சேர்ந்த கபடி வீராங்கனைகளும் நின்று கயிற்றை இழுத்தனர். இதில் மிகவும் சிரமப்பட்டு வெளிநாட்டினர் வெற்றி பெற்றனர். அதைத்தொடர்ந்து மண்பாண்டம் செய்தல், மூங்கில் கூடை முடைதல், பூக்கட்டுதல் போன்றவற்றையும் வெளிநாட்டினர் பார்வையிட்டனர். இவர்களில் சிலர் கிளிஜோதிடம், கைரேகை ஜோதிடத்தை பார்த்தனர்.

கிராமிய கலை நிகழ்ச்சிகளான கரகாட்டம், தப்பாட்டம், கும்மியாட்டம், காவடியாட்டம், சேவல்சண்டை போன்றவற்றையும், வெளிநாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தனர். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக அங்கு ஜல்லிக்கட்டு காளைகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. அதை அவர்கள் கண்டுகளித்தனர்.

மாட்டு வண்டிகளில் ஊர்வலம்

பின்னர் வெளிநாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு சர்க்கரைப்பொங்கல், சுண்டல், கரும்பு, வாழைப்பழம், இளநீர் போன்றவை வழங்கப்பட்டன. அதனை அவர்கள் ருசித்து சாப்பிட்டனர். பின்னர் மாட்டு வண்டிகளில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஊர்வலமாக சென்று நாஞ்சிக்கோட்டை கிராமத்தை சுற்றி வந்தனர். இவர்களில் பலர், சிறுவர்களுடன் நின்று ஆர்வத்துடன் செல்பி எடுத்து கொண்டனர்.

விழாவில் பங்கேற்ற கலிபோர்னியாவை சேர்ந்த வில்லியம்கெய்க்கர் கூறும்போது, நான் ஆண்டுதோறும் பொங்கல் விழாவில் பங்கேற்று வருகிறேன். தஞ்சை மக்கள் நட்பு ரீதியாக பழகுகிறார்கள். பொங்கல், கரும்பு, பானை செய்தல் போன்றவற்றை இங்கே தான் பார்க்க முடிகிறது. எங்கள் ஊர்களில் இவைகளை பார்க்க முடியாது. பொங்கல் விழாவை வீடுகள் தோறும் ஒருங்கிணைந்து கொண்டாடுவதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.

விழாவில் ஊராட்சிகள் உதவி இயக்குனர் முருகேசன், சுற்றுலா அலுவலர் ராஜசேகரன், கலைஆயம் நிறுவனர் முத்துக்குமார், தஞ்சை மருத்துவகல்லூரி முன்னாள் முதல்வர்கள் சங்கரநாராயணன், சிங்காரவேலு, முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் சத்தியராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Next Story