ஜல்லிக்கட்டு போட்டி 20-ந் தேதி நடக்கிறது ஆயத்த பணிகள் தீவிரம்


ஜல்லிக்கட்டு போட்டி 20-ந் தேதி நடக்கிறது ஆயத்த பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 14 Jan 2018 4:52 AM IST (Updated: 14 Jan 2018 4:52 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் அருகே உள்ள பொட்டிரெட்டிப்பட்டியில் வருகிற 20-ந் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது. இதற்கான ஆயத்த பணிகள் தீவிரம் அடைந்து உள்ளது.

நாமக்கல்,

தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு நாமக்கல் மாவட்டத்தில் அலங்காநத்தம், பொட்டிரெட்டிப்பட்டி, போடிநாயக்கன்பட்டி மற்றும் கரியபெருமாள்புதூர் ஆகிய பகுதிகளில் காலம், காலமாக நடத்தப்பட்டு வந்தது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டு ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்ததால் கடந்த சில ஆண்டுகளாக இப்பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படவில்லை.

கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டி ஆங்காங்கே நடத்தப்பட்டது. நாமக்கல் மாவட்டத்திலும் அலங்காநத்தம், பொட்டிரெட்டிப்பட்டி மற்றும் போடிநாயக்கன்பட்டி பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது.

இந்த ஆண்டும் பொட்டிரெட்டிப்பட்டி பகுதியில் வருகிற 20-ந் தேதியும், அலங்காநத்தம் பகுதியில் 27-ந்தேதியும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

பணிகள் தீவிரம்

இதுகுறித்து பொட்டிரெட்டிப்பட்டி ஜல்லிக்கட்டு போட்டி ஒருங்கிணைப்பு குழு தலைவர் செல்வராஜ் கூறியதாவது:-

எங்கள் கிராமத்தில் வருகிற 20-ந்தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்து உள்ளது. இதையொட்டி போட்டிக்கான ஏற்பாடுகளை தொடங்கி உள்ளோம். முதல்கட்டமாக தடுப்பு கட்டைகள் கட்டும் பணியை முடித்து விட்டோம். வருகிற 17-ந் தேதி முதல் மாடுகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் பதிவை தொடங்க உள்ளோம். மாட்டின் உரிமையாளர்கள் கோமாரிநோய் தடுப்பூசி அட்டை மற்றும் கால்நடை டாக்டர்கள் சான்றிதழுடன் வரவேண்டும். ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஆயத்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல் போடிநாயக்கன்பட்டி பகுதியில் அடுத்த மாதம் (பிப்ரவரி) 3-ந் தேதியும், கரியபெருமாள் புதூர் பகுதியில் 10-ந்தேதியும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதாக அப்பகுதியை சேர்ந்த நிர்வாகிகள் கூறினர். 

Next Story