5–வதாக பிறந்த 5 மாத பெண் குழந்தை திடீர் சாவு தந்தை கைது


5–வதாக பிறந்த 5 மாத பெண் குழந்தை திடீர் சாவு தந்தை கைது
x
தினத்தந்தி 16 Jan 2018 3:45 AM IST (Updated: 16 Jan 2018 2:50 AM IST)
t-max-icont-min-icon

அஞ்சுகிராமம் அருகே 5–வதாக பிறந்த 5 மாத பெண் குழந்தை திடீரென இறந்ததால், குழந்தையின் தந்தையை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

அஞ்சுகிராமம்,

குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே ராஜாவூர் பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 31), கூலி தொழிலாளி. இவரது மனைவி மூக்கம்மாள் (30). இவர்களுக்கு ஒரு மகனும், 4 மகள்களும் உள்ளனர். இந்தநிலையில், கடந்த 5 மாதங்களுக்கு முன்பு 5–வது குழந்தையாக ஒரு பெண் குழந்தை பிறந்தது.

அந்த குழந்தை உடல்நலம் குன்றி காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்காக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு 5 மாத பெண் குழந்தை திடீரென இறந்ததாக தெரிகிறது. இதையடுத்து நாகராஜனும், அவரது மனைவியும் சேர்ந்து யாரிடமும் அறிவிக்காமல் குழந்தையின் உடலை ரகசியமாக அடக்கம் செய்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அதிகாரி சங்கீதா, அஞ்சுகிராமம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து குழந்தை இறந்த தகவலை அதிகாரிகளிடம் அறிவிக்காமல் அடக்கம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் நாகராஜனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து அஞ்சுகிராமம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story