காணாமல் போன 149 மீனவர் குடும்பங்களுக்கு நிவாரண உதவித்தொகை வழங்க ஆய்வுப்பணி


காணாமல் போன 149 மீனவர் குடும்பங்களுக்கு நிவாரண உதவித்தொகை வழங்க ஆய்வுப்பணி
x
தினத்தந்தி 17 Jan 2018 4:30 AM IST (Updated: 17 Jan 2018 1:06 AM IST)
t-max-icont-min-icon

காணாமல் போன 149 மீனவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவித்தொகை வழங்க மேற்கொள்ளப்படும் கள ஆய்வுப்பணியை மீன்வளத்துறை இயக்குனர் தண்டபாணி, கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் ஆகியோர் பார்வையிட்டனர்.

நாகர்கோவில்,

ஒகி புயலால் காணாமல் போன 149 மீனவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவித்தொகை வழங்குவது தொடர்பாக மேற்கொள்ளப் பட்டு வரும் கள ஆய்வுப் பணியை மீன்வளத்துறை இயக்குனர் தண்டபாணி, கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.

பின்னர் மீன்வளத்துறை இயக்குனர் தண்டபாணி, நிருபர்களிடம் கூறியதாவது:-

ஒகி புயலில் சிக்கி காணாமல் போன மீனவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணத்தொகை வழங்குவது தொடர்பாக தமிழக அரசு கடந்த 12-ந் தேதி அன்று அரசாணை வெளியிட்டது. அதன்படி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தாசில்தார் தலைமையில், தாலுகா அளவில் மீன்துறை ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் மீனவ கிராமத்தின் பிரதிநிதிகள் மூன்று பேர் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழு காணாமல் போன மீனவர்களின் விவரத்தை உறுதி செய்யும் கள ஆய்வுப் பணியை இன்று (அதாவது நேற்று) முதல் நீரோடி, வள்ளவிளை, சின்னதுறை, பூத்துறை, மார்த்தாண்டன்துறை உள்ளிட்ட பகுதிகளில் தொடங்கியுள்ளது. இந்த குழு வழங்கும் அறிக்கையின் அடிப்படையில் காணாமல் போன 149 மீனவர்களின் விவரம் குறித்து உறுதி செய்யப்பட்டபின், மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டு அடுத்த நடவடிக்கையாக நிவாரண உதவித்தொகை வழங்கப்படும்.

இவ்வாறு மீன்வளத்துறை இயக்குனர் தண்டபாணி கூறினார்.

இந்த ஆய்வின்போது மீன்வளத்துறை இணை இயக்குனர் (சென்னை) ஜூடு ஆம்ஸ்ட்ராங், மீன்வளத்துறை துணை இயக்குனர் லாமேக் ஜெயகுமார், விளவங்கோடு தாசில்தார் கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர். 

Next Story