விடியலை தேடி விவசாயம்...!


விடியலை தேடி விவசாயம்...!
x
தினத்தந்தி 18 Jan 2018 6:30 AM GMT (Updated: 18 Jan 2018 6:18 AM GMT)

உயிர் வாழ அவசியமானது உணவு. அந்த உணவை பெற மனிதன் செய்த முதல் தொழில் விவசாயம் தான். இந்தியாவில் சுதந்திரத்துக்கு முன்பு வரை 85 சதவீத மக்கள் விவசாயத்தையே முதன்மை தொழிலாக செய்து வந்தனர்.

விவசாயத்தின் உபதொழிலான கால்நடை வளர்ப்பும் இவற்றில் அடங்கும். உழவுத்தொழிலுக்கு கால்நடைகளையே மூலதனமாக பயன்படுத்தினர். ஆடு, மாடுகளின் சாணங்களை பயிர்களுக்கு உரமாக பயன்படுத்தி நல்ல விளைச்சலை பெற்றனர். அவர்கள் விளைவித்த பொருட்கள் அனைத்தும் தரமாக இருந்ததால், நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தனர். மேலும், தான் உற்பத்தி செய்த பொருட்களை பண்டமாற்று முறையில் ஒருவருக்கொருவர் கொடுத்து பரிமாறிக் கொண்டனர்.

விவசாயிகள் உற்பத்தி செய்த பொருட்கள் நாட்டு மக்களின் தேவை போக வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன. இதன்மூலம் கிடைத்த அன்னிய செலாவணியும் தேவைக்கு அதிகமாகவே கையிருப்பில் இருந்தன. இதன்காரணமாக பொருளாதார வளர்ச்சிக்கு விவசாயம் முதுகெலும்பாக விளங்கியது. 1947-ம் ஆண்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் விவசாயத்தின் பங்கு 51.9 சதவீதம். ஆனால், 2013-ம் ஆண்டு வெறும் 13.7 சதவீதம் மட்டுமே. அதன்படி பார்த்தால், விவசாயத்தின் முதுகெலும்பு உடைந்து கொண்டு வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

எப்படியென்றால், 85 சதவீத மக்கள் செய்து வந்த ஒரு தொழிலில் தற்போது இருப்பவர்களை விரல்விட்டு எண்ணி விடலாம். அந்த அளவுக்கு விவசாயிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. காரணம் ‘உழவன் கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது’ என்ற பழமொழிக்கு ஏற்ப விவசாயத்தில் நஷ்டம் தான் மிஞ்சுகிறது. மேலும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த போதிய நடவடிக்கை எடுக்காததால் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏராளமான விவசாயிகள் மாற்று தொழிலை தேடி சென்றுவிட்டனர்.

சில விவசாயிகள் மட்டுமே, தனக்கு உணவளித்த மண்ணைவிட்டு வெளியேற மனமில்லாமல் மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதனால், விவசாயம் ஒரு ஒதுக்கப்பட்ட தொழிலாகவே பார்க்கப்படுகிறது. மேலும், படித்த இளைஞர்களுக்கு விவசாயம் செய்ய ஆர்வம் இருந்தும், அதனை ஒரு கவுரவமற்ற தொழிலாகவே பார்க்கின்றனர். படிப்புக்கு ஏற்ற வேலை இல்லையென்றாலும், கிடைத்த வேலையை தக்க வைக்க போராடுகின்றனர்.

மேலும், விவசாயிகளும் தனது மகன் விவசாயம் செய்வதை விரும்புவதில்லை. இதன்விளைவு, மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தி அதிகரிக்கவில்லை. உலகுக்கே உணவளித்த இந்தியா, தற்போது வெளிநாடுகளிடம் கையேந்தும் நிலைக்கு வந்துவிட்டது. ஆனால் மக்கள் தொகை பெருக்கமோ, சீனாவை மிஞ்சி உலக அளவில் முதல் இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

இந்தநிலை தொடர்ந்தால் விரைவில் உணவு பஞ்சத்தை சந்திக்க வேண்டிவரும். இதனை தடுக்க வேண்டுமானால், ஏரி, குளம் போன்ற நீர்நிலைகள் மற்றும் அவற்றுக்கு வரும் கால்வாய்களை தூர்வாரி நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும். மேலும், மழைநீர் வீணாக கடலில் சேராத வண்ணம் ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட வேண்டும். இதன்மூலம் கோடைகாலங்களிலும் விவசாயத்துக்கு தேவையான தண்ணீர் கிடைக்க வழி ஏற்படுத்தலாம்.

முக்கியமாக, மற்ற எல்லா பொருட்களுக்கும் உற்பத்தி செய்பவரே விலையை தீர்மானிப்பது போல, விவசாயி விளைவிக்கும் பொருட்களுக்கும் விவசாயியே விலையை நிர்ணயிக்க வேண்டும். இதன்மூலம் விவசாயத்தை லாபகரமான, கவுரவமான வேலையாக மாற்றலாம். ஆனால் மாற்று வேலைக்கு சென்றவர்கள் திரும்பி வருவார்களா? என்றால் கேள்விக்குறிதான். படித்த இளைஞர்களில் 90 சதவீதம் பேர் அரசு வேலையையே கவுரவமானதாக கருதுகின்றனர். இதற்காக, லட்சக்கணக்கானோர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு காத்திருக்கின்றனர். ஆனால் விவசாயம் செய்ய தயங்குகின்றனர். காரணம், பெற்றோர்களே தனது மகன்-மகள்களுக்கு விவசாயம் செய்ய கற்றுக்கொடுப்பதில்லை. தான் பட்ட கஷ்டம் தன்னோடு போகட்டும் என்பது தான் பெரும்பாலான விவசாயிகளின் அறிவுரையாக உள்ளது.

இப்படியே அனைவரும் நினைத்தால் விரைவில் விவசாயம் அழியும். பின்னர் என்ன நடக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. எனவே விவசாயத்தை அழியாமல் காப்பதற்கு ஒரே வழி, அரசே விவசாயம் செய்ய வேண்டும். விளைநிலங்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து அரசே பயிர் செய்ய வேண்டும். விளைபொருட்களை அரசே கொள்முதல் செய்து ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய வேண்டும். நாட்டின் தேவை போக மீதமுள்ளதை ஏற்றுமதி செய்யலாம். அல்லது மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் சேமித்து வைத்து எதிர்காலத்தில் பயன்படுத்தலாம்.

கால்நடை வளர்ப்பிலும் அரசு ஈடுபட வேண்டும். இங்கு வேலை செய்பவர்களுக்கு அரசே சம்பளம் வழங்க வேண்டும். மற்ற அரசு ஊழியர்களை போல, வயதான விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். இவையெல்லாம் நடைமுறையில் சாத்தியமில்லை என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், விவசாயி க(ந)ஷ்டப்பட்டு உற்பத்தி செய்த அரிசியை, பள்ளி மாணவர்களுக்கு சமைத்து போடும் சமையலர் அரசு ஊழியராக இருக்கலாம். நாட்டையே சீரழிக்கும் மதுபானங்களை, அரசு மதுக்கடையில் வைத்து விற்பவர் அரசு ஊழியராக இருக்கலாம். அப்படியென்றால், உலகுக்கே உணவு அளிக்கும் விவசாயி ஏன் அரசு ஊழியராக இருக்க கூடாது?

-பாலகன்

Next Story