செயல்வழிக் கற்றல் முறை முழுமை பெறுமா?


செயல்வழிக் கற்றல் முறை முழுமை பெறுமா?
x
தினத்தந்தி 18 Jan 2018 12:30 PM IST (Updated: 18 Jan 2018 12:05 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தின் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் செயல்வழிக்கற்றல் முறை நடைமுறையில் உள்ளது. ஒன்றாம் வகுப்பிலிருந்து நான்காம் வகுப்பு வரையிலான மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு இருக்கிறார்கள்.

 ஒவ்வொரு பாடப்பிரிவிலும் அடைய வேண்டிய திறன்கள் ஒரு ஏணி வடிவில் அமைக்கப்பட்டு, அதில் பல மைல் கற்கள் குறிக்கப்பட்டுள்ளன. ஏணியின் ஒவ்வொரு படிக்கும் உரிய பல செயல்முறைகளும் அவற்றிற்கான குறியீடுகளும் வகுக்கப்பட்டுள்ளன. அதனைப் புரிந்துகொண்ட குழந்தை ஏணியில் படிப்படியாக ஏறிச் செல்கிறது.

வகுப்பறையின் நான்கு சுவரிலும் குழந்தைக்கு எட்டும் உயரத்தில் கரும்பலகை அமைக்கப்பட்டு, ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒன்று முதல் நான்காம் வகுப்பு வரையிலான குழந்தைகள் ஒன்றாகக் கற்கிறார்கள். பல குழுக்களாகப் பிரிந்து வட்டமாக அமர்ந்து, ஆசிரியரின் துணையுடனோ, சக மாணவர் துணையுடனோ, தாமாகவோ கற்கிறார்கள். ஆசிரியர் குழந்தைகளுக்குச் சமமாகத் தரையில் அமர்ந்து கற்பிக்கிறார். பாடப் புத்தகத்துக்குப் பதிலாகப் படங்களும், சொற்களும் கொண்ட அட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்நிலையில் செயல்வழிக் கற்றல் முறை அரசு பள்ளிகளில் பெயரளவில் செயல்படுத்தப்படுவதால், அதன் தாக்கம் மாணவர்களை முழுமையாக சென்றடையவில்லை. எனவே, அரசு கொண்டுவர இருக்கும் புதிய கற்பித்தல் முறைகளில் செயல்வழி கற்றலுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். சமீபத்தில் தமிழகம் முழுவதும் அனைவருக்கும் கல்வி இயக்க அதிகாரிகளின் சிறப்பு குழுக்கள் தமிழக அரசு பள்ளிகளில் ஆய்வு செய்ததில் செயல்வழி கற்றல் பல பள்ளிகளில் செயல்படாததை கண்டறிந்தது. இதுதொடர்பாக அரசுக்கு அறிக்கை அளித்துள்ளது. கல்வி முறைகளை சரியாக பின்பற்றுவதில் தொடக்க பள்ளிகளில் நிலவும் பிரச்சினைகளில் மிக முக்கியமானது, ஆசிரியர் பற்றாக்குறை. இன்று செயல் வழிக் கற்றல் வேண்டாமென எதிர்க்கும் ஆசிரியர் சங்கங்கள் சுட்டும் முதல் காரணம் இதுதான். இன்று தமிழக ஆரம்பப் பள்ளிகள் அனைத்தும் ஈராசிரியர் பள்ளிகளே.

கட்டணம் வசூலிக்கும் எந்தப் பள்ளியாவது ஒரு வகுப்புக்கு ஒரு ஆசிரியரின்றி நடைபெற இயலுமா? கதியற்ற ஏழைக் குழந்தைகளுக்குத்தான் இந்நிலை. செயல்வழிக் கற்றல் பற்றி ஒரு கருத்து நிலவுகிறது. பல வகுப்பு மாணவர் ஒன்றாகக் கற்பதால் ஒரு ஆசிரியரே போதுமானது என்பது பொய்யான வாதம். செயல்வழிக் கல்வியில் ஆசிரியருக்கு ஒவ்வொரு மாணவரைப் பற்றியும், மாணவர்களின் பலம், பலவீனங்கள் குறித்தும் சரியான கணிப்பு தேவை. ஆகவே இத்திட்டத்திற்குத் தேவைப்படுவது முன்பைவிட அதிக ஆசிரியரேயன்றிக் குறைவாக அல்ல. இத்திட்டத்தின் முதல் தேவை வகுப்பிற்கு ஓராசிரியர். இம்முறையில் ஒவ்வொரு குழந்தையும் தன்னுடைய சொந்த வேகத்திலேயே கற்க முடியும் என்றாலும், ஒரு ஆண்டிலோ அல்லது நான்கு ஆண்டுகள் முடியும்போதோ குறிப்பிட்ட கற்றல் அடைவுகளை அனைத்துக் குழந்தைகளும் அடையச் செய்ய வேண்டும். மூன்றாம், நான்காம் வகுப்புகளிலுள்ள குழந்தைகள் சுயமாகக் கற்கும் திறமைகளை அடைந்துவிட வேண்டும். ஆனால் இன்று பாதிக்குக் குறைவாகத்தான் ஒரு எளிய கதை வாசிக்கும் திறமை பெற்றவர்களாக உள்ளனர்.

குறிப்பிட்ட சதவீத மாணவர்கள் வார்த்தைகள் வாசிப்பதைத் தாண்டி, அடுத்த படிக்கு முன்னேறவில்லை. கணிதத்திலும் இதே நிலைதான். தாழ்வுற்ற இந்தத் திறமை நிலைக்குச் செயல்வழிக் கற்றல்தான் காரணம் என்று சொல்லவில்லை. ஆனால், இவ்வழிக் கற்றல் திறமை அடைவுகளில் முன்னேற்றம் எதையும் உண்டாக்கியிருப்பதாகத் தெரியவில்லை.

செயல்வழிக் கற்றல் கல்வி அரசு உதவி பெறும் பள்ளிகளில் மட்டுமே ஏன் நடைபெறுகிறது? மெட்ரிக் பள்ளிகளில் ஏன் அறிமுகப்படுத்தப்படவில்லை? வசதிபடைத்த குழந்தைகள் ஏன் இந்தத் திட்டத்திலிருந்து விடுபட்டுள்ளனர்? இலவசப் பள்ளிகளில் மட்டுமே இத்திட்டம் என்பது ஏற்கனவே இருவகைப் பள்ளிகளுக்கும் உள்ள இடைவெளியை இன்னும் அதிகரிக்குமோ? வசதியற்ற குழந்தைகள் போட்டிக் களத்தில் முன்பைவிட வலுவிழந்தவர்களாக ஓரங்கட்டி ஒதுக்கப்படும் நிலை ஏற்படுமோ? என்ற கேள்விகள் எழாமல் இல்லை. பல ஆசிரியர் சங்கங்கள் இத்திட்டம் மெட்ரிக் பள்ளிகளுக்கும் கொண்டுவரப்பட வேண்டுமென்று கோரிக்கை வைத்துள்ளன. அதிலும், புதிய கல்விக் கொள்கை, புதிய கற்பித்தல் முறைகள் குறித்துப் பேசிவரும் தமிழக அரசு முதல் கட்டமாக இத்திட்டத்தை அனைவருக்கும் பொதுவானதாக ஆக்க வேண்டும்.

செயல்வழிக் கற்றல் ஆசிரியரை சிந்திக்க வைப்பதாக இல்லை. இத்திட்டத்தின் ஒவ்வொரு ஏணியின் ஒவ்வொரு மைல் கல்லும், ஒவ்வொரு மைல்கல்லின் ஒவ்வொரு படியும், ஒவ்வொரு படியின் ஒவ்வொரு செயல்பாடும், இப்படித்தான் இருக்க வேண்டுமென்று இறுக்கமாக வரையறுக்கப்பட்டு வலியுறுத்தப்படுகிறது. இது கற்பித்தலின் ஜீவனையே கொன்றுவிடுகிறதோ என்ற ஐயம் எழுகிறது. செயல்வழிக் கற்றல் முறையோடு தொடர் மதிப்பீட்டு முறையும் இணைக்கப்பட்டுள்ளதால், பள்ளி நடக்கும் ஒரு நாளைக்குரிய 8 மணி நேரத்தில் 16 வகையான பதிவேடுகளை பராமரிப்பதிலேயே பாடத்தில் கவனம் செலுத்த முடியாமல் போய்விடுகிறது.

இன்று இத்திட்டத்தை ஆதரித்தும், எதிர்த்தும் பல குரல்கள் எழுந்துள்ளன. பெரும்பாலான ஆசிரியர் சங்கங்கள் செயல்வழிக் கற்றல் கல்வி முறையை கொள்கையளவில் ஏற்றுக்கொண்டாலும், ஆசிரியர் பற்றாக்குறை போன்ற அதன் அடிப்படை தேவைகளைத் தீர்க்காமல் திட்டத்தைத் தொடரக் கூடாது என்கின்றன. சங்கங்கள் பொத்தாம் பொதுவாக எதிர்க்காமல் திட்டத்தின் அடிப்படைகளையும், நுணுக்கங்களையும் குறித்து, அறிவுப்பூர்வமாக, அனுபவபூர்வமாகப் பரந்த ஆய்வும் விவாதமும் நடத்தி, தங்கள் ஆலோசனைகளை ஏற்க அரசை வற்புறுத்த வேண்டும்.

நீண்ட காலமாக கல்வித் துறையில் இயங்கும் பல பள்ளிகளில், ஆசிரியர் பற்றாக்குறை, சமுதாயப் பங்கேற்பின்மை போன்ற பிரச்சினைகளை சரி செய்ய வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக செயல் வழிக்கற்றல் முறையை சிறப்படைய செய்ய வகுப்பறையில் படைப்பாற்றல், அனுபவ முதிர்ச்சியில் ஆசிரியர்கள் பொறுப்புணர்வை பள்ளிகளில் வெளிப்படுத்த வேண்டும். இவை அனைத்தும் மேற்கொள்ளப்பட்டால், தமிழ் நாட்டின் அனைத்து குழந்தைகளும் ஆர்வத்துடன் கற்று, கற்றல் திறன்களை அடைவார்கள். செயல்வழிக்கற்றல் முறையும் முழுமைபெறும். எனவே செயல் வழிக்கற்றல் பாணியில் புதிதாக வரவிருக்கும் புதிய தொடக்கக் கல்வி கற்பித்தல் முறை மேற்கண்ட பிரச்சினைகளிலிருந்து தொடராமல், அவற்றிற்கு தீர்வு காணப்பட்டு கற்பித்தலில் ஆசிரியர்களின் சிந்தனையை தூண்டுவதாக அமைய வேண்டும்.

க.தர்மராஜ், ஆசிரியர்

Next Story