பாலியல் தொல்லை கொடுத்த விவசாயியை அரிவாள்மனையால் வெட்டி கொன்ற மனைவி கைது


பாலியல் தொல்லை கொடுத்த விவசாயியை அரிவாள்மனையால் வெட்டி கொன்ற மனைவி கைது
x
தினத்தந்தி 19 Jan 2018 4:30 AM IST (Updated: 19 Jan 2018 12:11 AM IST)
t-max-icont-min-icon

மதுபோதையில் பாலியல் தொல்லை கொடுத்த விவசாயியை, அரிவாள்மனையால் வெட்டி கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள தொண்டமாந்துறை கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ்(வயது 48). விவசாயி. இவருடைய மனைவி லூர்துமேரி(43). இவர்களுக்கு 2 மகள்கள், 1 மகன் உள்ளனர். இந்நிலையில் செல்வராஜ் கடந்த சில வருடங்களாக தொழுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தார்.

மேலும் இவருக்கு குடிப்பழக்கமும் இருந்துள்ளது. இதனால் அடிக்கடி குடித்துவிட்டு வந்து தனது மனைவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. தொழுநோயால் பாதிக்கப்பட்ட கணவர் செல்வராஜிடம் அதிகம் நெருக்கம் காட்டாமல் லூர்துமேரி இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு நடந்திருக்கிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு செல்வராஜ் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மனைவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது. இதனால் ஆவேசத்தில் லூர்துமேரி தனது கணவரை தீர்த்து கட்ட முடிவு செய்தார். சத்தம் கேட்டு மகன், மகள்கள் எழுந்துவிடக்கூடாது என்பதற்காக, அவர்கள் தூங்கிக்கொண்டிருந்த அறையின் கதவை லூர்துமேரி பூட்டி விட்டார். பிறகு வீட்டிலிருந்த அரிவாள்மனையை எடுத்து வந்து செல்வராஜை சரமாரியாக லூர்துமேரி வெட்டி சாய்த்தார்.

இதில் கழுத்து, கை, கால் உள்ளிட்ட இடங்களில் செல்வராஜூக்கு வெட்டு காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதற்கிடையே அரிவாள்மனையை கீழே போட்டுவிட்டு அங்கிருந்து சென்ற லூர்துமேரி நேராக அரும்பாவூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று கணவரை கொலை செய்த விவரத்தை கூறி சரணடைந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

பின்னர் சம்பவம் நடந்த வீட்டிற்கு பெரம்பலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக், அரும்பாவூர் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து செல்வராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட அரிவாள்மனையை போலீசார் கைப்பற்றினர்.

இந்த கொலை சம்பவம் குறித்து அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து லூர்துமேரியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவரின் செயல்பாடுகள் பிடிக்காத காரணத்தாலும், அவர் ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தியதாலும் கொலை செய்ததாக லூர்துமேரி தெரிவித்ததாக போலீசார் கூறினர்.

மனைவியே கணவரை வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story