ஏரியில் மூழ்கி டாக்டர்-என்ஜினீயர் பலி நண்பர்களுடன் குளித்தபோது பரிதாபம்


ஏரியில் மூழ்கி டாக்டர்-என்ஜினீயர் பலி நண்பர்களுடன் குளித்தபோது பரிதாபம்
x
தினத்தந்தி 19 Jan 2018 4:30 AM IST (Updated: 19 Jan 2018 12:35 AM IST)
t-max-icont-min-icon

ஏரியில் நண்பர்களுடன் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி டாக்டர், என்ஜினீயர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சேலம்,

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ஏத்தாப்பூர் கடைவீதி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் ஏத்தாப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் கண் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவருடைய மகன் ஜெகன்மோகன் (வயது 25). இவர் தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்து முடித்துள்ளார். இவரது நண்பர் கருமந்துறை தாளவீதியைச் சேர்ந்த கெங்கவல்லி ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் சிங்காரவேலுவின் மகன் தினேஷ் (25). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் கம்ப்யூட்டர் என்ஜினீயரிங் படித்துவிட்டு வீட்டில் இருந்தார்.

இவர்களது பள்ளிப்பருவ நண்பர்கள் ஆத்தூர் ராணிப்பேட்டையை சேர்ந்த குமரேசன் என்பவரின் மகன் கோகுலகிருஷ்ணன் (25), பெத்தநாயக்கன்பாளையம் தேவேந்திரகுல வேளாளர் தெருவை சேர்ந்த வீராசாமியின் மகன் நவீன் (25). இவர்கள் 2 பேரும் எம்.பி.பி.எஸ். முடித்துள்ளனர்.

நண்பர்கள் 4 பேரும் நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு 2 மோட்டார் சைக்கிள்களில் ஆத்தூர் அருகே உள்ள சுற்றுலாத்தலமான முட்டல் ஏரிக்கு குளிக்கச்சென்றனர். பின்னர் அவர்கள், ஏரியில் இருந்து தண்ணீர் வழிந்தோடும் பகுதிக்கு சென்றார்கள். அங்கு குட்டைபோல் தண்ணீர் தேங்கி நின்ற இடத்தில் இறங்கி குளித்துக்கொண்டு இருந்தனர்.

அப்போது நீச்சல் தெரியாததால் ஆழமான பகுதிக்கு சென்ற தினேஷ் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தார். அவரை காப்பாற்ற முயன்ற ஜெகன்மோகனும் தண்ணீரில் மூழ்கினார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கோகுலகிருஷ்ணனும், நவீனும் “காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்“ என்று கூச்சலிட்டனர்.

இந்த சத்தம் கேட்டு அருகில் இருந்த விவசாய நிலங்களில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயிகள் அங்கு ஓடிவந்து, தண்ணீரில் மூழ்கிய 2 பேரையும் காப்பாற்ற முயன்றனர். ஆனால், அதற்குள் தினேசும், ஜெகன்மோகனும் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பேரின் உடல்களையும் பொதுமக்கள் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்.கார்த்திக்குமார், இன்ஸ்பெக்டர் கேசவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் ஏரியில் மூழ்கி பலியான டாக்டர் ஜெகன்மோகன், என்ஜினீயர் தினேஷ் ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள்.

அங்கு அவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. படிப்பை முடித்து சமீபத்தில் பட்டம் பெற்ற 2 பேரும் வேலை தேடி வந்த நிலையில் ஏரியில் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story