கழுத்தை அறுத்து பெண் கொலை வெறிச்செயலில் ஈடுபட்ட 2-வது கணவரை பொதுமக்கள் கட்டி வைத்தனர்


கழுத்தை அறுத்து பெண் கொலை வெறிச்செயலில் ஈடுபட்ட 2-வது கணவரை பொதுமக்கள் கட்டி வைத்தனர்
x
தினத்தந்தி 18 Jan 2018 11:15 PM GMT (Updated: 18 Jan 2018 7:05 PM GMT)

பட்டப்பகலில் நடுரோட்டில் கழுத்தை அறுத்து பெண் கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட அவரது 2-வது கணவரை பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்து இரும்புக்கம்பியில் கட்டி வைத்தனர்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள பெரம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் தர்மராஜ் (வயது45). கூலித்தொழிலாளி. இவர் தனது முதல் மனைவியிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனியாக வாழ்ந்து வந்தார். இவருக்கும், பூவனூர் அருகே உள்ள பண்டாரவாடை கிராமத்தை சேர்ந்த சுமதி(35) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. சுமதி ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். தர்மராஜ் சுமதியை 2-வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 9 வயதில் ஒரு மகன் உள்ளான். இந்தநிலையில் சுமதிக்கும், அப்பகுதியை சேர்ந்த வேறு ஒரு வாலிபருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதை அறிந்த தர்மராஜ் சுமதியை கண்டித்தார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. எனவே சுமதி, தர்மராஜை பிரிந்து நீடாமங்கலம் கோரையாற்றாங்கரை தெருவில் தனது மகனுடன் வசித்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று காலை 6.30 மணியளவில் சுமதி நீடாமங்கலம் கடைவீதியில் அண்ணாசிலை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தர்மராஜ், சுமதியிடம் கள்ளத்தொடர்பை கைவிட்டு தன்னுடன் சேர்ந்து வாழுமாறு கூறினார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த தர்மராஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுமதியின் கழுத்தை அறுத்தார். இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த சுமதி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். பட்டப்பகலில் நடுரோட்டில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் பெண்ணின் கழுத்தை ஒருவர் அறுத்ததை கண்ட மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே பொதுமக்கள் ஒன்று சேர்ந்து தர்மராஜை சுற்றி வளைத்து பிடித்து நீடாமங்கலம் அண்ணாசிலையை சுற்றி அமைக்கப்பட்டுள்ள இரும்புக்கம்பியில் கட்டி வைத்துவிட்டு நீடாமங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன், நீடாமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி, சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கட்டி வைக்கப்பட்டிருந்த தர்மராஜிடம் விசாரணை நடத்தினர். பின்னர் சுமதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தர்மராஜை நீடாமங்கலம் போலீசார் கைது செய்தனர். பட்டப்பகலில் நடுரோட்டில் பெண் ஒருவரை அவரது 2-வது கணவர் கத்தியால் கழுத்தை அறுத்துக்கொன்ற சம்பவம் நீடாமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story