கோக்குடி கிராமத்தில் ஜல்லிக்கட்டு; 39 பேர் காயம்


கோக்குடி கிராமத்தில் ஜல்லிக்கட்டு; 39 பேர் காயம்
x
தினத்தந்தி 19 Jan 2018 4:15 AM IST (Updated: 19 Jan 2018 1:08 AM IST)
t-max-icont-min-icon

கோக்குடி கிராமத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 39 பேர் காயமடைந்தனர்.

திருமானூர்,

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே உள்ள கோக்குடி கிராமத்தில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் பொங்கல் விழாவையொட்டி நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதையொட்டி கோக்குடியில் உள்ள பள்ளி மைதானத்தில் வாடிவாசல் அமைக்கப்பட்டது. முதலில் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. பின்னர் புனித இஞ்ஞாசியர் ஆலயத்தின் காளையை பங்கு தந்தை சந்தியாகு புனிதப்படுத்தி முதலில் அவிழ்த்து விடப்பட்டது. அதைத்தொடர்ந்து வாடிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

இதில் 150-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டி போட்டு அடக்கினர். அப்போது பொதுமக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். இதில் சேலம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், பெரம்பலூர், திருச்சி, அரியலூர், ஜெயங்கொண்டம், திருமானூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்திருந்த 265-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

காளைகள் முட்டியதில் இலந்தைகூடத்தை சேர்ந்த பர்வின்குமார் (வயது 20), கரைவெட்டியை சேர்ந்த ஜெகதீசன் (27), திருமானூரை சேர்ந்த சூர்யா (26), திருச்சியை சேர்ந்த நாராயணன் (32), மேலரசூரை சேர்ந்த வினோத் (27) உள்பட 39 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் பர்வின்குமார் உள்பட படுகாயமடைந்த 6 பேரை தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் விழா குழுவினரால் வெள்ளி நாணயங்கள், கட்டில், நாற்காலிகள், சில்வர் பாத்திரங்கள், வேட்டி-சேலை போன்ற பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டு போட்டியை காண சேலம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், பெரம்பலூர், திருச்சி, அரியலூர், ஜெயங்கொண்டம், திருமானூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு போட்டியை கண்டு களித்தனர். ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் கோக்குடி பொதுமக்கள் செய்திருந்தனர். அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபினவ்குமார் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

Next Story