காவிரி வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற வேண்டும் காவிரி உரிமை மீட்புக்குழு வலியுறுத்தல்


காவிரி வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற வேண்டும் காவிரி உரிமை மீட்புக்குழு வலியுறுத்தல்
x
தினத்தந்தி 19 Jan 2018 4:30 AM IST (Updated: 19 Jan 2018 1:31 AM IST)
t-max-icont-min-icon

காவிரி வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்று காவிரி உரிமை மீட்புக்குழு வலியுறுத்தி உள்ளது.

தஞ்சாவூர்,

காவிரி உரிமை மீட்புக்குழு ஆலோசனைகூட்டம் தஞ்சையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தமிழர் தேசிய முன்னணி பொதுச்செயலாளர் அயனாவரம்முருகேசன், தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் மணிமொழியன், இந்திய ஜனநாயக கட்சி மாவட்ட தலைவர் சிமியோன்சேவியர்ராஜ், தாளாண்மை உழவர் இயக்க தலைவர் திருநாவுக்கரசு, தமிழர் தேசிய பேரியக்கத்தை சேர்ந்த பழ.ராஜேந்திரன், வைகறை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி ஒருங்கிணைப்பாளர் மணியரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா தலைமையில் 3 நீதிபதிகள் அமர்வில் காவிரி வழக்கு மிகவும் காலதாமதமாக நடந்து வருகிறது. தமிழகத்தில் 28 லட்சம் ஏக்கர் பாசன நிலங்களும், 20 மாவட்ட மக்களின் குடிநீரும், காவிரியை நம்பியுள்ள நெருக்கடிகளை சுப்ரீம்கோர்ட்டு நீதிபதி அமர்வு ஏற்றுக்கொண்டதாகவோ, அதன் மீது அக்கறையும், அவசரமும் காட்டியதாகவோ தெரியவில்லை. உடனடியாக தண்ணீர் தேவை கருதி 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடும்படி கர்நாடக அரசுகு தீபக்மிஸ்ரா, பலமுறை உத்தரவிட்டும் அதனை நிறைவேற்றவில்லை. ஆனால் கர்நாடக அரசின் மீது சுப்ரீம்கோர்ட்டு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா மீது அவருடன் பணியாற்றும் நீதிபதிகள் குற்றச்சாட்டு கூறி உள்ள நிலையில் காவிரி வழக்கில் நிலுவையில் உள்ள தீர்ப்பு வழங்கும் செயலை கைவிட்டு, இந்த வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றுமாறு தலைமை நீதிபதியை கேட்டுக்கொள்கிறோம்.

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கர்நாடகம் தண்ணீர் திறந்து விட மறுத்துவிட்டது. மத்திய அரசு எங்கள் கோரிக்கைக்கு பதில் சொல்லவில்லை. எனவே இருக்கிற தண்ணீரை திறந்து விட்டு முழுமையாக விளைச்சல் கிடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என கூறி உள்ளார். பிரதமருடன் மிக நெருக்கமான நல்லுறவு வைத்துள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் காவிரி நீர் பெறுவதற்காக பிரதமரை நேரில் சந்தித்து அழுத்தம் கொடுக்காதது ஏன்?.

எனவே அனைத்துக்கட்சி தலைவர்களை கொண்ட குழுவினரை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக அழைத்துக்கொண்டு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, கர்நாடக அரசு அவசர காலதேவைக்காக 15 டி.எம்சி. தண்ணீரை தமிழகத்திற்கு திறந்து விட கர்நாடக முதல்-மந்திரிக்கு அழுத்தம் தர வலியுறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story