‘மண் காக்கும் வீரத்தமிழர் பேரமைப்பு’ வீரப்பன் மனைவி முத்துலட்சுமி புதிய இயக்கம் தொடங்கினார்


‘மண் காக்கும் வீரத்தமிழர் பேரமைப்பு’ வீரப்பன் மனைவி முத்துலட்சுமி புதிய இயக்கம் தொடங்கினார்
x
தினத்தந்தி 19 Jan 2018 4:30 AM IST (Updated: 19 Jan 2018 2:16 AM IST)
t-max-icont-min-icon

‘மண் காக்கும் வீரத்தமிழர் பேரமைப்பு‘ என்ற புதிய இயக்கத்தை வீரப்பன் மனைவி முத்துலட்சுமி நேற்று தொடங்கினார்.

சேலம்,

சந்தன கடத்தல் வீரப்பனின் 66-வது பிறந்தநாள் விழா சேலத்தில் உள்ள பார்த்தசாரதி அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு வீரப்பன் மனைவி முத்துலட்சுமி தலைமை தாங்கினார். நடிகர் பெஞ்சமின், கும்பகோணத்தை சேர்ந்த முருகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வக்கீல் மாயன் வரவேற்று பேசினார். இதைத்தொடர்ந்து முத்துலட்சுமி ‘மண் காக்கும் வீரத்தமிழர் பேரமைப்பு‘ என்ற புதிய அமைப்பை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நான் ஏற்கனவே ‘மலைவாழ் மக்கள் இயக்கம்’ என்ற அமைப்பை தொடங்கி நடத்தினேன். இந்த இயக்கத்தை சரியாக நடத்த முடியாமல் போய்விட்டது. புதிதாக தொடங்கப்பட்டுள்ள இயக்கம் மூலம் மக்கள் பிரச்சினைகளுக்கும், உரிமைகளை மீட்டெடுக்கவும் தொடர்ந்து போராடுவோம்.

இந்த மண்ணுக்காகவும், நீருக்காகவும் குரல் கொடுத்தவர் வீரப்பன். அதுபோல நீரையும், மண்ணையும் மீட்டெடுக்கும் சூழல் தற்போது வந்துள்ளது. எனவே தான் தமிழக மக்களுக்கு குரல் கொடுக்க புதிய அமைப்பை ஏற்படுத்தி உள்ளேன். இதற்கு தமிழக மக்கள் அனைவரும் ஆதரவு தர வேண்டும். மக்களுக்கு என்னென்ன பிரச்சினை உள்ளது என்பது குறித்து எனக்கு தெரியும்.

தூய்மையான தண்ணீர் இல்லை. வெளிநாட்டு மருந்துகளால் விவசாயம் கெட்டு விட்டது. இதை மீட்டெடுக்க வேண்டும். அமைப்பை வலுப்படுத்துவது தொடர்பாக மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் செல்ல இருக்கிறேன். என் கணவர் உயிருடன் இருந்து இருந்தால் கர்நாடக அரசு மேகதாது அணையை கட்ட முடியுமா?, ஒகேனக்கலில் பிரச்சினை வந்து இருக்குமா?. வீரப்பன் இருந்தால் அங்கு அதிகாரிகள் வந்து இருக்கவே மாட்டார்கள்.

வீரப்பன் மீதான வேட்டையால் பாதிக்கப்பட்ட தமிழக, கர்நாடக எல்லையில் உள்ள 1,500 குடும்பங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். என்னால் முயன்ற வரை பொதுமக்களுக்கு சேவை செய்வதற்காகவே வந்துள்ளேன். பதவி, பணத்துக்கு ஆசைப்பட்டு வரவில்லை. பெண்கள் டிவியில் நாடகம் பார்ப்பதிலும், ஆண்கள் மது மற்றும் செல்போனிலும் மூழ்கி கிடக்கிறார்கள். இந்த 3 பிரச்சினைகளில் இருந்தும் அவர்களை மீட்க முயற்சி மேற்கொள்ளப்படும்.

வீரப்பனை திட்டமிட்டு கொலை செய்து விட்டார்கள். இதற்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. ஜெயலலிதாவின் மரணம் குறித்து வெளி உலகத்திற்கு சரியாக தெரியாமல் உள்ளது. அவருக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களின் நிலையை சிந்தித்து பார்க்க வேண்டும். தற்போது எங்களுக்கு தேர்தலில் போட்டியிடும் எண்ணமில்லை. ஆனால் கால சூழ்நிலையை பொறுத்து முடிவு எடுப்பேன்.

இவ்வாறு முத்துலெட்சுமி கூறினார்.

விழாவில் வீரப்பன் மகள்கள் வித்யாராணி, பிரபா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story