ஈரோட்டில் எச்.ராஜா உருவ பொம்மையை எரிக்க முயன்ற 21 பேர் கைது


ஈரோட்டில் எச்.ராஜா உருவ பொம்மையை எரிக்க முயன்ற 21 பேர் கைது
x
தினத்தந்தி 21 Jan 2018 4:30 AM IST (Updated: 21 Jan 2018 2:49 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில், எச்.ராஜா உருவ பொம்மையை எரிக்க முயன்ற 21 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு,

தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் பாரதீய ஜனதா கட்சி தேசிய செயலாளர் எச்.ராஜா உருவ பொம்மை எரிக்கும் போராட்டம் நேற்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்கள் ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் ஒன்று திரண்டனர். மேலும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், திராவிடர் கழகத்தினர் மற்றும் தி.மு.க.வினரும் அங்கு வந்தனர்.

இந்த போராட்டத்துக்கு தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்ட செயலாளர் குமரகுருபரன் தலைமை தாங்கினார். இளைஞர் அணி அமைப்பாளர் சந்திரன், மாவட்ட அமைப்பாளர் சண்முகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தனவிஜயன், துணை அமைப்பாளர் ஆதிமூலம், திராவிடர் கழக அமைப்பாளர் சண்முகம், தி.மு.க. பொறுப்பாளர் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எச்.ராஜாவுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். பின்னர் அவர்கள் திடீரென எச்.ராஜாவின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயன் தலைமையிலான போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

மொத்தம் 4 பெண்கள் உள்பட 21 பேரை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றினார்கள். பின்னர் அவர்கள் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டனர். மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

முன்னதாக தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்ட செயலாளர் குமரகுருபரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

பாரதீய ஜனதாவை சேர்ந்த எச்.ராஜா, திராவிட இயக்க தலைவர்களை பற்றி தொடர்ந்து அவதூறாக பேசி வருகிறார். இதை அவர் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் அவருக்கு எதிராக தமிழகத்தில் தொடர்ந்து போராட்டம் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story