சேவைக்காக ஐ.ஏ.எஸ். கனவை கைவிட்டவர்


சேவைக்காக ஐ.ஏ.எஸ். கனவை கைவிட்டவர்
x
தினத்தந்தி 21 Jan 2018 1:30 PM IST (Updated: 21 Jan 2018 12:26 PM IST)
t-max-icont-min-icon

மிட்டல் பட்டேல், குஜராத் மாநிலத்தில் உள்ள சங்கல்பூர் கிராமத்தை சேர்ந்தவர். 35 வயதாகும் இவருக்கு ஐ.ஏ.எஸ். ஆகி கிராமப்புற மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே கனவாக இருந்திருக்கிறது.

கல்லூரி படிப்பில் தங்க பதக்கமும் வென்றிருக்கிறார். ஐ.ஏ.எஸ் தேர்வுக்காக படித்துக்கொண்டிருந்தார். ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆன பின்பு தனது பணிக்கு உதவிகரமாக இருக்கும் என்பதற்காக தொண்டு நிறுவனத்துடன் இணைந்து சமூக சேவையிலும் ஈடுபட்டு வந்தார். அப்போது குஜராத் மாநிலத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு சென்று பின் தங்கிய நிலையில் இருக்கும் மக்களை சந்தித்து பேசினார்.

பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமங்களுக்கு சென்றபோது அங்கு வசிப்பவர்களிடையே சமூக விழிப்புணர்வு இல்லாததை கண்டு அதிர்ந்து போயிருக்கிறார். ஏனெனில் பழங்குடியின மக்களின் பெயர்கள் அரசு ஆவணங்கள் எதிலும் இடம்பெறாமல் இருந்திருக்கிறது. வாக்காளர் அடையாள அட்டை பெறுவதற்கு கூட ஆர்வம் காட்டாமல் இருந்திருக்கிறார்கள். அரசு வழங்கும் அடையாள அட்டைகள் எதுவும் இல்லாததால் நலத்திட்ட உதவிகள் எதுவும் அவர்களுக்கு சென்றடையவில்லை. அவர்களுக்கு அரசின் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை வழங்குவதற்கு முடிவு செய்தவர் தொண்டு நிறுவன பணியை ராஜினாமா செய்துவிட்டார். கூடவே ஐ.ஏ.எஸ். கனவையும் கைவிட்டுவிட்டார்.

பழங்குடியின மக்களுக்கு உதவுவதற்காகவே சுயமாக தொண்டு நிறுவனம் ஒன்றை ஏற்படுத்தி சமூக சேவையை தொடர்ந்து கொண்டிருக்கிறார். மிட்டல் பட்டேலின் தீவிர களப் பணியின் காரணமாக இப்போது 20 ஆயிரம் பழங்குடியின மக்கள் வாக்காளர் அடையாள அட்டைகளை பெற்றிருக்கிறார்கள். 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பையும் ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார். அரசின் திட்டங்கள் அவர்களை சென்றடைவதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகிறார்.

Next Story