பரவும் வாடகைத்தாய் கலாசாரம்


பரவும் வாடகைத்தாய் கலாசாரம்
x
தினத்தந்தி 21 Jan 2018 4:18 PM IST (Updated: 21 Jan 2018 4:18 PM IST)
t-max-icont-min-icon

குழந்தை என்பது குடும்பத்தின் அச்சாணி. அதனால் திருமணமாகி, கணவர் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது ஒவ்வொரு பெண்ணின் கனவாக இருக்கிறது.

திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் தாய்மையடைய முடியாத நிலை ஏற்படும்போது பெண்கள் கலங்கிப்போகிறார்கள். தங்களுக்கு வாரிசு இல்லையே என்று ஏங்கு கிறார்கள். அந்த ஏக்கத்தை தீர்க்க இலைமறைவு காயாக உருவானது வாடகைத்தாய் முறை. ஆனால் இப்போது அதுவே ஒரு பேஷனாக அவதாரமெடுத்திருக்கிறது. ஒரு புறம் வேறு வழியே இல்லாமல் அத்தியாவசியத்திற்காக வாடகைத்தாயை உருவாக்கி, பலர் தாய்- தந்தையாகிக் கொண்டிருக்க, மறுபுறம் பேஷனுக்காக சிலர் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

வாடகைத்தாய் முறை உருவானது வெளிநாட்டில். அங்கு தனித்து வாழ்பவர்கள், ஓரின சேர்க்கையாளர்கள் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வது அவசிய தேவையாக இருந்தது. நம் நாட்டை பொறுத்தவரை குழந்தை இல்லாத, குழந்தை பிறக்க வாய்ப்பே இல்லாத தம்பதிகளுக்கு இது வரப்பிரசாதமாக அமைந்தது. ஆனால் நாளடைவில் பலரும் வாடகைத்தாய் வசதியை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். திருமணம் செய்து கொள்ளாமலே கணவன், மனைவியாக வாழ்பவர்கள் மற்றும் தனித்து வாழும் ஆண், பெண் இருபாலரும் இந்த முறையை பயன்படுத்த தொடங்கியிருக்கிறார்கள்.

இன்று பிரபலங்களும் வாடகைத்தாய் முறையை பின்பற்றுகிறார்கள். நடிகர் ஷாருக்கான் தனது மனைவி மூலம் இரண்டு குழந்தைகளுக்கு தந்தையாகியிருந்தார். அவர் மூன்றாவதாக வாடகைத்தாய் மூலம் தந்தையானார். அதற்கு அவர் சொல்லும் காரணம், ‘என் மனைவியால் பிரசவ வலியை தாங்க முடியவில்லை’ என்பதுதான்.

இளம் நடிகர் துஷார் திருமணம் செய்து கொள்ளாமலேயே வாடகைத்தாய் மூலம் ஒரு குழந்தைக்கு தந்தையாகி இருக்கிறார். இதுபற்றி வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் கருத்து தெரிவிக்கையில், ‘‘அவசிய தேவைக்காக என்றிருந்த விஷயம் இன்று பேஷனாகிவிட்டது. இது நம் நாட்டிற்கு பொருத்தமாக இருக்குமா என்பது புரியவில்லை. ஒருவேளை இதை தடுத்து நிறுத்த சட்டம் கொண்டு வந்து விட்டால் குழந்தை இல்லாத தம்பதியர் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். எந்த ஒரு விஷயமும் அதன் எல்லையை தாண்டிப் போனால் விபரீதத்தில் முடியும். அதனால் இது பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் கொண்டு வர வேண்டும்’’ என்றார்.

இன்றைய காலகட்டத்தில் வாடகைத்தாய் கலாசாரம் ஒரு தொழிலாகவே மாறிவிட்டது. பணம் தேவைப்படும் பெண்கள் ஏஜெண்டுகள் மூலம் வாடகைத் தாய்களாக அமர்த்தப்படுகிறார்கள். குழந்தையை பெற்று உரியவர்களிடம் ஒப்படைத்துவிட்டு பணத்தை பெற்றுக்கொண்டு சென்றுவிடுகிறார்கள்.

பிரபல மருத்துவர் நய்னா பட்டேல் 10 ஆண்டு களாக வாடகைத்தாய் மூலமாக சுமார் 1120 குழந்தைகளை சமூகத்திற்கு தந்திருக்கிறார். வாடகைத்தாய் முறை விவாதமாக மாறிவருவது பற்றி அவர் சொல்கிறார். ‘‘சமூகத்தின் எந்தவொரு விஷயத்தையும் மேலோட்டமாக பார்க்கக் கூடாது. ஒரு சேவை இருக்கிறது என்றால் பலரும் அதை பயன்படுத்தத்தான் முயற்சிப்பார்கள். அதை தடுத்து நிறுத்துவதன் மூலம் இந்தியாவின் எந்த கலாசாரத்தையும் காப்பாற்றிவிட முடியாது. குழந்தை இல்லாத தம்பதிகளின் மன வேதனையை கொஞ்சம் சிந்தித்து பார்க்க வேண்டும்.

சேவை மனப்பான்மை கொண்ட பெண்கள் பலர் வாடகைத்தாயாகி, குழந்தை இல்லாத தம்பதியரின் ஏக்கத்தை போக்குவதற்கு முன்வந்திருக்கிறார்கள். அதன் மூலம் அவர்களுக்கு நல்ல வருமானமும் கிடைக்கிறது. இதில் என்ன தவறு இருக்கிறது? விபசாரத்திற்கு அங்கீகாரம் கொடுக்கும்போது வாடகைத்தாய் விஷயத்தை ஏன் குரூரமான கண்களோடு பார்க்க வேண்டும். எந்த சட்டம் என்றாலும் அது இயற்றப் படுவதற்கு முன்பு அதில் சம்பந்தப்பட்டவர்களிடமும் கலந்தாலோசிக்க வேண்டும். வெளிநாட்டு தம்பதிகள் கூட இந்தியா வந்து, வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டு போகிறார்கள். அவர்கள் அதற்கு 11 லட்சம் ரூபாய் வரை செலவழிக்கிறார்கள். இந்திய தம்பதிகள் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறுவதற்கு ரூ.6 லட்சம் வரை செலவழிக்கிறார்கள். இந்த தொகை வாடகைத்தாயாகும் பெண்ணின், ஏழை குடும்பத்திற்கு உதவியாக இருக்கும். அதை ஏன் தடுக்க வேண்டும்?’’ என்கிறார், அவர்.

வாடகைத்தாய்மார்கள் சில வரைமுறைகளுக்கு உட்படவேண்டியதிருக்கிறது. ஒரு பெண் தன் வாழ்நாளில் ஒரு முறைதான் வாடகைத்தாயாக வேண்டும். அதற்கு முன்பாக ஒரு குழந்தையாவது ஆரோக்கியமாக பெற்றெடுத்திருக்க வேண்டும். வயது அதிகமாக இருக்கக்கூடாது. உடலில் வேறு எந்தவிதமான பிரச்சினையும் இருக்கக்கூடாது என்பது போன்ற பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல குழந்தை தேவைப்படும் தம்பதிகள் திருமணமாகி ஐந்து ஆண்டுகள் கழித்துதான் வாடகைத்தாய் முறையை கையாள வேண்டும். திருமணமாகி குழந்தை பேறு இல்லாதவர்கள் மட்டுமே இந்த முறையை பயன்படுத்தலாம். குழந்தை என்பது உணர்வுபூர்வமான விஷயம். ஏற்கனவே குழந்தையை பெற்றெடுத்தவர்கள் மீண்டும் வாடகைத்தாய் மூலம் மற்றொரு குழந்தையை பெற்றெடுக்கும் விஷயம் பிரச்சினைக்குரியது. அந்த குழந்தை வளர்ந்து ஆளாகும்போது அதன் மனநிலை பாதிப்புக்குள்ளாகும். அதுபற்றி சிந்திக்க வேண்டும். குழந்தை வளர்ப்பில் ஆண், பெண் இருவருக்கும் பங்கு இருக்கிறது. ஆண் மட்டும் தனியாக வாடகைத்தாய் மூலம் குழந்தையை பெற்றெடுத்து வளர்ப்பது கஷ்டமான காரியம். இதையெல்லாம் சிந்திக்காமல் விளையாட்டுதனமாக வாடகைத்தாய் சேவையை பயன்படுத்தக்கூடாது என்ற எதிர்ப்பு குரலும் ஒலிக்கிறது.

வாடகைத்தாய் மூலம் ஒரு குழந்தையை பெற்றெடுக்கும்போது உருவாகும் பின் விளைவுகளை பற்றியும் பொறுப்போடு சிந்திக்க வேண்டும். எதையும் சமுதாயம் பயன்படுத்தும் விதத்தில்தான் அதன் நன்மை, தீமை உள்ளடங்கி இருக்கிறது. பெற்ற தாயைவிட குழந்தைக்கு இந்த உலகத்தில் முக்கிய பாதுகாப்பு வேறு எதுவுமில்லை. பெற்றெடுக்காதவர்கள் குழந்தைக்கு தாயாகுவது சிரமம்தான். பணத்தை கொடுத்து குழந்தையை வாங்கிவிடலாம். ஆனால் பணத்தை கொடுத்து அம்மாவை வாங்க முடியாது.

வாடகைத்தாய் முறையில் ஐ.வி. எப். சிகிச்சை குறிப்பிடத்தக்கது. தாயின் கரு முட்டையையும், தந்தையின் விந்தணுவையும் ஒன்று சேர்த்து பரிசோதனை கூடத்தில் வளர்த்து வாடகைத்தாயின் கர்ப்பத்தில் புகுத்தப்படுகிறது. அந்த கருவை வளர்த்து முழுமையாக்கி குழந்தையாக பெற்றுத்தரும் வேலைமட்டும்தான் வாடகைத்தாய்க்குரியது. அதனால் குழந்தை தாய்-தந்தையின் பண்பை பெற்றிருக்கும். இதனால் பலரும் இந்த முறையை விரும்புகிறார்கள். ஆனால் கருமுட்டை தாயிடம் இல்லாதபோது அதற்கு வேறு அணுகுமுறை அவசியப்படுகிறது. அப்போது வாடகைத்தாயின் கருப்பை மட்டுமல்ல, கருமுட்டையையும் பயன்படுத்தும் சூழ்நிலை உருவாகலாம். அல்லது வேறு யாரிடமிருந்தாவது கருமுட்டை பெறலாம்.

மகப்பேறு மருத்துவர் ஒருவர் சொல்கிறார்: ‘‘ஆரம்பத்தில் எங்கோ ஒரு மூலையில் நடந்து வந்த விஷயம் இப்போது பரவலாகி விட்டது. வாடகைத்தாயாக இருப்பதற்கு பல பெண்கள் முன்வருகிறார்கள். நாங்கள் வாடகைத்தாயின் எதிர்காலம் பாதிக்கப்படக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம். அவர்கள் குழந்தை பெறும் நிலையில் இருக்க வேண்டும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் முறையாக தெரிவித்துவிட்டு அவர்கள் அனுமதித்தால் மட்டுமே நாங்கள் சம்மதிக்கிறோம். விருப்பமுள்ள சில குடும்பத்தினரை நானே அழைத்து பக்குவமாக எடுத்துரைக்கிறேன். இந்தியாவில் சில ஆயிரம் சிகிச்சை மையங்கள் உள்ளன. வாடகைத்தாயாக விருப்பம் தெரிவிப்பவர் களுக்கென தனி வாடகை வீடு எடுக்கப்பட்டு குழந்தை பெறும் வரை அவர்கள் அங்கு குடியமர்த்தப்படுகிறார்கள். அவர்களுக்கு உணவு, உடை, முறையான சிகிச்சை அனைத்தும் வழங்கப்படுகிறது. மருத்துவரின் நேரடி கண்காணிப்பில் பராமரிக்கப்படு கிறார்கள்’’ என்கிறார். இவர் சொல்வது போன்று வாடகைத்தாய் முறை வேகமாக பரவிக்கொண்டுதான் இருக்கிறது.

Next Story