90 சதவீத பணிகள் முடிந்தன: மாட்டுத்தாவணி பழமார்க்கெட் விரைவில் திறக்கப்படுகிறது


90 சதவீத பணிகள் முடிந்தன: மாட்டுத்தாவணி பழமார்க்கெட் விரைவில் திறக்கப்படுகிறது
x
தினத்தந்தி 22 Jan 2018 4:15 AM IST (Updated: 22 Jan 2018 1:08 AM IST)
t-max-icont-min-icon

90 சதவீத பணிகள் முடிந்துவிட்டதால், மாட்டுத்தாவணி பழமார்க்கெட் விரைவில் திறக்கப்படுகிறது.

மதுரை,

மதுரை நகரில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் சிம்மக்கல் பழமார்க்கெட் மற்றும் கீழமாரட் வெங்காய மார்க்கெட் ஆகியவற்றை இடமாற்றம் செய்ய அப்போது மேயராக இருந்த ராஜன் செல்லப்பா நடவடிக்கை எடுத்தார். இதற்காக அவர் மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி அரசிடம் அனுமதி பெற்றார். அதன் அடிப்படையில் மாட்டுத்தாவணி சென்ட்ரல் மார்க்கெட் வளாகத்தில் பழக்கடைகள் கட்டப்பட்டன.

இந்த கடைகள் கட்டுவதற்கு பழமார்க்கெட் சங்கத்தினரே நிதி திரட்டி கட்டிடம் கட்டினர். மேலும் இடத்திற்கு மட்டும் மாநகராட்சி நிர்வாகம் குறைந்தபட்ச மாத வாடகையை வசூலிக்கும். இந்த கட்டிட பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளன. இந்த பணிகள் முழுமையாக முடிந்தவுடன் விரைவில் மார்க்கெட் செயல்பாட்டுக்கு வரும்.

இந்த பணிகளை ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., மாநகராட்சி ஆணையாளர் அனீஷ் சேகர் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது அவர்கள் அங்கு முடிக்க வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினர். மேலும் பணிகளை காலதாமதமின்றி முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டனர்.

பின்னர் இது குறித்து ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

மதுரை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி முதலில் ஆம்னி பஸ் நிலையத்தை மாட்டுத்தாவணிக்கு மாற்றினோம். மாநகராட்சி எல்லைப்பகுதிகளில் லாரி நிலையங்கள் அமைத்து உள்ளோம். இதன் தொடர்ச்சியாக சிம்மக்கல் பழமார்க்கெட்டை மாட்டுத்தாவணிக்கு இடமாற்றம் செய்ய முடிவு செய்தோம். இதற்காக பழவியாபாரிகளுடன் ஆலோசனை நடத்தி தற்போது 240 கடைகளை கட்டி உள்ளோம். இந்த பணிகளை இன்னும் 3 மாதத்தில் முடித்து விட்டு திறக்கப்படும். அப்போது சிம்மக்கல் பகுதியில் உள்ள அனைத்து பழக்கடைகளும் இங்கு வந்துவிடும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story