பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு: 2 பஸ்களை சிறைபிடித்த கிராம மக்கள்


பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு: 2 பஸ்களை சிறைபிடித்த கிராம மக்கள்
x
தினத்தந்தி 22 Jan 2018 4:30 AM IST (Updated: 22 Jan 2018 1:08 AM IST)
t-max-icont-min-icon

பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து 2 பஸ்களை பொதுமக்கள் சிறைபிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சின்னாளபட்டி,

பஸ் கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியிட்டது. முன் அறிவிப்பு ஏதுமின்றி திடீரென அதிகமாக கட்டணம் உயர்த்தியதால் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது.

திண்டுக்கல்லில் இருந்து ஏ.வெள்ளோடுக்கு 2 அரசு பஸ்களும், ஒரு தனியார் பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் வழியோர கிராமங்களான கல்லுப்பட்டி, உரிமைகாரன்பட்டி, செல்லுரணிபட்டி, மூர்த்திநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதி மக்கள் பயன் பெற்று வருகின்றனர். கட்டணம் உயர்த்தப்படுவதற்கு முன்பு திண்டுக்கல்லில் இருந்து கல்லுப்பட்டிக்கு ரூ.6 கட்டணமாக வசூலிக்கப்பட்டது.

பஸ் கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகு அரசு பஸ்சில் ரூ.10-ம், தனியார் பஸ்களில் ரூ.12-ம் கட்டணமாக வசூல் செய்யப்பட்டு வருகிறது. அன்றாடம் கூலிவேலைக்கு சென்று வரும் பொதுமக்கள் கட்டண உயர்வால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் திரண்டனர்.

நேற்று காலை 10 மணிக்கு வெள்ளோடு நோக்கி சென்ற அரசு பஸ்சையும், வெள்ளோட்டில் இருந்து திண்டுக் கல் சென்ற தனியார் பஸ்சையும் சிறைபிடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அம்பாத்துரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது உயர்த்தப்பட்ட பஸ் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும், இல்லையெனில் அரசு மற்றும் தனியார் பஸ்களில் ஒரே கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து அதிகாரிகளின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி கூறினர்.

இதை ஏற்றுக்கொண்ட கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். 2 பஸ்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story