விமான நிலையத்திற்கு தேவர் பெயர் சூட்ட பரிந்துரைக்காவிட்டால் அமைச்சர்கள் வீடுகளை முற்றுகையிடுவோம்


விமான நிலையத்திற்கு தேவர் பெயர் சூட்ட பரிந்துரைக்காவிட்டால் அமைச்சர்கள் வீடுகளை முற்றுகையிடுவோம்
x
தினத்தந்தி 22 Jan 2018 4:30 AM IST (Updated: 22 Jan 2018 1:08 AM IST)
t-max-icont-min-icon

மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் தேவர் பெயர் சூட்ட பரிந்துரை செய்யாவிட்டால், அமைச்சர்கள் வீடுகளை முற்றுகையிடுவோம் என அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக நிறுவனர் கூறினார்.

மதுரை,

மதுரையில் அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நிறுவனர் தலைவர் டாக்டர் சேதுராமன் கலந்து கொண்டு பேசினார்.

பின்னர் அவர் நிருபர் களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கதேவர் பெயரை சூட்ட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதற்காக பல போராட்டங்களையும் நடத்தி இருக்கிறோம். தமிழகத்தில் தலைவர்கள் பெயர் சூட்டுகிற கொள்கை இல்லை என பலர் கூறுகின்றனர். மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர். பெயரையும், வைகை புதிய பாலத்திற்கு ஜெயலலிதா பெயர் சூட்டி உள்ளதுபோல் பசும்பொன் தேவர் பெயரை சூட்டுவதில் என்ன தவறு இருக்கிறது.

தமிழக அரசு, வேறு சிலரை தூண்டி விட்டு பசும்பொன் தேவர் பெயரை சூட்டும் வாய்ப்பை தடுத்து நிறுத்துகிறது. வருகிற மார்ச் 15-ந்தேதிக்குள் பசும்பொன் தேவர் பெயரை சூட்ட பரிந்துரை செய்ய வேண்டும். அப்படி இல்லை என்றால் தென் மாவட்டத்தில் உள்ள தமிழக அமைச்சர்களின் வீடுகளை முற்றுகையிடுவோம்.

பஸ் கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க. அறிவித்துள்ள போராட்டத்திற்கு அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் ஆதரவு அளிக்கிறது. இந்த போராட்டத்தில் அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் கலந்து கொள்ளும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story