வீட்டை விட்டு வெளியேறி காதலனை தேடி நள்ளிரவில் தனியாக சாலையில் நடந்து சென்ற இளம்பெண்


வீட்டை விட்டு வெளியேறி காதலனை தேடி நள்ளிரவில் தனியாக சாலையில் நடந்து சென்ற இளம்பெண்
x
தினத்தந்தி 22 Jan 2018 3:45 AM IST (Updated: 22 Jan 2018 2:20 AM IST)
t-max-icont-min-icon

தாராபுரத்தில் வீட்டை விட்டு வெளியேறி நள்ளிரவில் காதலனை தேடி சாலையில் நடந்து சென்ற இளம்பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

தாராபுரம்,

பதின்ம வயதினரை காதல் படுத்தும்பாடு... அப்பப்பா...காதல் கனவு அவர்களை தூங்க விடுவதும் இல்லை. அவர்கள் தூங்குவதும் இல்லை. அவர்களுக்கு இரவும் இல்லை, பகலும் இல்லை. தாராபுரத்தில் காதலால் கட்டுண்ட இளம்பெண், வீட்டை விட்டு வெளியேறி நள்ளிரவு நேரம் காதலனை தேடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது பற்றிய விவரம் வருமாறு:-

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் போலீசார் பொள்ளாச்சி சாலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 20 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர், சுடிதார் அணிந்து தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அவர் கையில் சில ஆவணங்களை வைத்திருந்தார். இந்த நள்ளிரவு நேரத்தில் இளம் பெண்ணை பார்த்த போலீசார் நாம் காண்பது கனவா? அல்லது நினைவா? என்று ஒரு நொடி திகைத்தனர். ஒருவேளை புதிய இந்தியா பிறந்து விட்டதாகவே முடிவு செய்தனர்.

உடனே பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் வாகனத்திலிருந்து இறங்கிச் சென்று அந்த இளம் பெண்ணை அழைத்து விசாரித்துள்ளார். ஏமா, இந்த நள்ளிரவு நேரம், தன்னந்தனியாக எங்கு செல்கிறாய்? வீட்டில் எதுவும் பிரச்சினையா? என்று கேட்டுள்ளனர். அதற்கு அந்த இளம் பெண் சென்னையில் உள்ள பிரபல நிறுவனம் ஒன்றில் வேலை கேட்டு விண்ணப்பித்ததாகவும், அந்த நிறுவனத்திலிருந்து நேர்முகத் தேர்விற்கு அழைப்பு வந்துள்ளதால், நேர்முகத் தேர்வில் கலந்து கொள்வதற்காக தனது தந்தையுடன் பஸ் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்ததாகவும், அப்போது தன்னுடைய கல்விச் சான்றிதழ்களை மறந்து வீட்டில் வைத்துவிட்டு வந்து விட்டதால், அதை எடுத்து வருவதற்காக தான் மட்டும் தனியாக வீட்டிற்கு வந்து, எடுத்துக் கொண்டு செல்வதாகவும். தனது தந்தை அமராவதி சிலை அருகே தன்னை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

ஆனால் அந்த இளம் பெண் கூறிய தகவல் பெண் போலீஸ் அதிகாரிக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையத்து போலீசார் அந்த பெண்ணை, போலீஸ் வாகனத்தில் ஏறும்படியும், அமராவதி சிலை அருகே காத்துக் கொண்டிருக்கும் தந்தையிடம் பத்திரமாக சேர்த்துவிடுவதாகவும் தெரிவித்துள்ளனர். அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். ஆனால் போலீசார் அந்த பெண்ணை தனியாக விட்டு செல்ல முடியாது என்பதால், அவரை வலுக்கட்டாயமாக வாகனத்தில் ஏற்றி அமராவதி சிலை பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு அந்த பெண்ணின் தந்தை காத்திருப்பதாக சொன்ன இடத்தில் போலீசார் தேடிப்பார்த்தபோது, அங்கு அப்படி யாரும் காத்திருந்ததாக தெரியவில்லை. உடனே போலீசார் அந்த பெண்ணிடம் உன்னுடை தந்தை இங்கு காத்திருப்பதாக சொன்னாயே, எங்கே அவர்? என்று கேட்டனர். அதற்கு அந்த பெண் ஒரு வேளை என் தந்தை நீண்ட நேரமாகியும் என்னை காணவில்லை என்பதால், அருகே உள்ள பஸ் நிலையத்திற்கு சென்றிருக்கலாம். நான் நடந்து பஸ்நிலையத்திற்கு சென்று என் தந்தையிடம் சேர்ந்து கொள்கிறேன். நீங்கள் போங்கள். உங்கள் உதவிக்கு நன்றி என்று கூறியுள்ளார்.

போலீசாருக்கு அந்த பெண் ஏதோ நாடகம் ஆடுகிறாள் என்பது தெரிந்து விட்டது. அப்படி எல்லாம் உன்னை தனியாக விட்டுவிட்டுப் போகமுடியாது. நீ உன் தந்தையை செல்போன் மூலமாக அழைத்து அவர் எங்கே இருக்கிறார் என்று சொல் என கூறியுள்ளனர். அதற்கு அந்த பெண் தயக்கம் காட்டியதாக தெரிகிறது. அந்த நேரத்தில் அந்த பெண்ணின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்ததை போலீசார் கவனித்துவிட்டு, அந்த பெண்ணிடம் இருந்த செல்போனை வாங்கி பேசியுள்ளனர்.

மறுமுனையில் அந்த பெண்ணின் தந்தை கதறியவாறு “அம்மா எங்கம்மா இருக்கே. உன்னை வீடு முழுவதும் தேடி பார்த்துட்டேன். எங்கம்மா போன. எங்கள விட்டுட்டு போயிறாதம்மா என்று அழுதுள்ளார். இதைக்கேட்டதும் போலீசார் அதிர்ச்சி அடைந்து அந்த பெண்ணை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் தாராபுரம் பொள்ளாச்சி ரோட்டை சேர்ந்த 19 வயது இளம் பெண் என்பது தெரியவந்தது.

இவர் கடந்த ஒரு வருடமாக தாராபுரம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்து வந்துள்ளார். அந்த இளம் பெண்ணின் காதலருக்கு திருமண வயது நிரம்பி விட்டது. ஆனால் அந்த இளம் பெண்ணுக்கு திருமண வயது வரவில்லை. எனவே 18 வயது வரும் வரை காத்திருந்துள்ளார். தற்போது அந்த 18 வயது முடிந்து 19 வயது பிறந்து விட்டதால் காதலரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். அதற்கு சாதி தடையாக இருந்துள்ளது.

இதனால் பெற்றோருக்கு தெரியாமல் நள்ளிரவில் கல்விச்சான்றுகளுடன் வீட்டைவிட்டு வெளியேறி, காதலனை தேடிச்சென்றுள்ளார். அப்போது தான் அந்த இளம்பெண் போலீசாரிடம் சிக்கிக் கொண்டார் என்பது தெரியவந்தது. அதன் பிறகு போலீஸ் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி அந்த இளம் பெண்ணின் பெற்றோருக்கு தகவல் கொடுத்து வரவழைத்தனர். அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அந்த இளம் பெண் பெற்றோருடன் செல்ல மறுத்துவிட்டார். காதலன் குடும்பத்தினர் அந்த இளம் பெண்ணை ஏற்றுக் கொண்டு முறைப்படி திருமணம் செய்து வைப்பதாக ஒப்புக்கொண்டதால், அந்த பெண்ணை தனது காதலனுடன் போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தாரா புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story