பெண்களிடம் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது


பெண்களிடம் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது
x
தினத்தந்தி 22 Jan 2018 4:15 AM IST (Updated: 22 Jan 2018 4:01 AM IST)
t-max-icont-min-icon

மாதவரத்தில் பெண்களிடம் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட பழைய குற்றவாளிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

செங்குன்றம்,

சென்னையை அடுத்த மாதவரம் பால்பண்ணை பேங்கர்ஸ் காலனியை சேர்ந்தவர் புவனா என்ற புவனேஸ்வரி(வயது 24). இவர், கடந்த 9-ந்தேதி அந்த பகுதியில் தனியாக நடந்து சென்ற போது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம ஆசாமிகள் புவனா கழுத்தில் கிடந்த 4 பவுன் சங்கிலியை பறித்துச்சென்று விட்டனர்.

இதேபோல் மாதவரம் பகுதியில் சங்கிலி பறிப்பு சம்பவங்கள் அதிகளவில் நடைபெற்று வருவதாக வந்த புகாரின்பேரில், சங்கிலி பறிப்பில் ஈடுபடுபவர்களை கைது செய்ய மாதவரம் உதவி கமிஷனர் ஜெயசுப்பிரமணியம் மேற்பார்வையில் மாதவரம் பால்பண்ணை இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் இரவு மாதவரம் பால்பண்ணை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தும்படி போலீசார் சைகை செய்தனர். ஆனால் அந்த ஆட்டோ நிற்காமல் சென்றது.

போலீசார் அந்த ஆட்டோவை விரட்டிச்சென்று மடக்கி பிடித்தனர். அதில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள், சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த முகமது ரபீக்(24), சென்னை ஓட்டேரி எஸ்.எஸ். புரத்தை சேர்ந்த லோகநாதன் (41) என்பதும், இவர்கள்தான் மாதவரம் பகுதியில் புவனா உள்பட பலரிடம் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டதும் தெரிந்தது. 2 பேரையும் மாதவரம் பால்பண்ணை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

கடந்த ஆண்டு சிந்தாதிரிப்பேட்டையில் நடந்த ஒரு கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு இருந்த லோகநாதனும், 10-க்கும் மேற்பட்ட வழிப்பறி, சங்கிலி பறிப்பு வழக்கில் அண்ணாசாலை போலீசாரால் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட முகமதுரபீக்கும் புழல் சிறையில் நண்பர்களாயினர்.

கடந்த மாதம் 23-ந்தேதி இவர்கள் இருவரும் விடுதலையாகி சிறையில் இருந்து வெளியே வந்து உள்ளனர். அதன்பிறகு இருவரும் சேர்ந்து சங்கிலி பறிப்பில் ஈடுபட்டு வந்து உள்ளனர். பழைய குற்றவாளிகளான இவர்கள் இருவரும் ஏற்கனவே குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

கைதான 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருவொற்றியூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இவர்களிடம் இருந்து ஒரு ஆட்டோவும், 4 பவுன் தாலி சங்கிலியும் பறிமுதல் செய்யப்பட்டது. 

Next Story