மாணவ-மாணவிகள் நம்பிக்கையுடன் படிக்க வேண்டும் பள்ளி விழாவில் போலீஸ் அதிகாரி பேச்சு


மாணவ-மாணவிகள் நம்பிக்கையுடன் படிக்க வேண்டும் பள்ளி விழாவில் போலீஸ் அதிகாரி பேச்சு
x
தினத்தந்தி 23 Jan 2018 4:15 AM IST (Updated: 23 Jan 2018 3:47 AM IST)
t-max-icont-min-icon

திருமங்கலத்தில் நடந்த பள்ளி விழாவில் மாணவ-மாணவிகள் நம்பிக்கையுடன் படிக்க வேண்டும், தேர்வு எழுத பயப்படக்கூடாது என்று போலீஸ் அதிகாரி பேசினார்.

திருமங்கலம்,

திருமங்கலம் பி.கே.என். ஆண்கள் பள்ளியின் 108-வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு போட்டிகள் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. பள்ளி கமிட்டி தலைவர் சின்னச்சாமிநாடார் தலைமை தாங்கினார். செயலாளர் செல்வராஜ் வரவேற்றார். விழாவில் தமிழக ரெயில்வே போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:- மாணவர்கள், மாணவிகள் தேர்வு எழுத தயங்கக்கூடாது. பாடங்களை படித்து விட்டு திருப்பி படித்ததை நினைவு கூற வேண்டும். 3 முறை திரும்ப திரும்ப படித்ததை நினைவு படுத்த வேண்டும். தேர்வு எழுத பயப்படக்கூடாது. (அப்போது ஒரு மாணவன் தேர்வுக்கு பயப்படவில்லை, மார்க் எடுக்கத்தான் வழி தெரியவில்லை என்றான்.) 10, பிளஸ்-2 தேர்வுக்கு இன்னும் நாட்கள் உள்ளன. அதற்குள் எந்த பாடத்தில் பயம் ஏற்படுகிறதோ, அந்த பாடத்தை திரும்ப திரும்ப படிக்க வேண்டும்.

புத்தகம் பரிசு

மேலும் பாடங்களை ஆராய்ச்சி செய்து படித்தால் நல்ல மார்க் வாங்கலாம். பெரிய சாதனை செய்ய திட்டமிட்டால் நம்பிக்கை வரும். அதனால் நம்பிக்கையுடன் மாணவ-மாணவிகள் படிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து அவர் மேடையை விட்டு இறங்கி மாணவர்களுடன் பேசி பொது அறிவியல் குறித்து கலந்துரையாடினார். அதில் பதில் கூறிய மாணவர்களுக்கு புத்தகத்தை பரிசாக வழங்கினார். நிகழ்ச்சியில் ஊர் பிரமுகர்கள், பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார். 

Next Story