பஸ் கட்டண உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல்


பஸ் கட்டண உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல்
x
தினத்தந்தி 23 Jan 2018 4:15 AM IST (Updated: 23 Jan 2018 3:52 AM IST)
t-max-icont-min-icon

பஸ் கட்டண உயர்வை கண்டித்து திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 40 பேரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல்,

தமிழகத்தில் கடந்த 20-ந்தேதி திடீரென பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதில் குறைந்தபட்சம் 20 சதவீதம் முதல் அதிகபட்சமாக 54 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட்டது. முன்அறிவிப்பு இல்லாமல் திடீரென பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்தது.

இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். மேலும் அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்த போவதாகவும் அறிவித்துள்ளன. இந்த நிலையில் நேற்று பஸ் கட்டண உயர்வை கண்டித்து, திண்டுக்கல் பஸ் நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சாலை மறியல்போராட்டம் நடந்தது.

இதற்கு முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி தலைமை தாங்கினார். நகர செயலாளர் ஆசாத், ஒன்றிய செயலாளர் அஜாய்கோஷ் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். மேலும் பஸ் கட்டண உயர்வை கண்டித்தும், திரும்ப பெற வலியுறுத்தியும் கோஷமிட்டனர். பின்னர் பஸ்கள் செல்ல முடியாதபடி திடீரென சாலையில் அமர்ந்தும், படுத்து கொண்டும்போராட்டம் நடத்தினர்.

இதனால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து திண்டுக்கல் வடக்கு போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி மற்றும் நிர்வாகிகள் உள்பட 40 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் காரணமாக பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story