என்ஜின் கோளாறு; கோவை ரெயில் நடுவழியில் நிறுத்தம் 2 ரெயில்கள் தாமதம்


என்ஜின் கோளாறு; கோவை ரெயில் நடுவழியில் நிறுத்தம் 2 ரெயில்கள் தாமதம்
x
தினத்தந்தி 23 Jan 2018 4:15 AM IST (Updated: 23 Jan 2018 3:54 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் இருந்து புறப்பட்ட கோவை பாசஞ்சர் ரெயில் தோவாளை அருகே சென்றபோது என்ஜினில் திடீர் கோளாறு ஏற்பட்டு நடுவழியில் நின்றது. இதனால் நாகர்கோவிலுக்கு 2 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தாமதமாக வந்தன.

ஆரல்வாய்மொழி,

நாகர்கோவிலில் இருந்து கோவைக்கு தினமும் காலையில் பாசஞ்சர் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் நாகர்கோவில் கோட்டார் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்பட்டு செல்வது வழக்கம். அதே போல் நேற்று காலையும் கோவை பாசஞ்சர் ரெயில் புறப்பட்டது. ஆனால் தோவாளை அருகே உள்ள திருமலைபுரம் பகுதியில் சென்றபோது ரெயில் என்ஜினில் திடீரென கோளாறு ஏற்பட்டது. இதனால் ரெயிலை தொடர்ந்து இயக்க முடியாமல் நடுவழியில் நிறுத்தப்பட்டது. பின்னர் இதுபற்றி நாகர்கோவில் ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து அதிகாரிகள் அங்கு விரைந்து சென்றனர். இதற்கிடையே ரெயில்வே ஊழியர்கள் என்ஜினில் ஏற்பட்ட பழுதை சரிசெய்ய முயற்சித்தும் பலன் இல்லை. என்ஜினை யார்டுக்கு கொண்டு சென்றால்தான் பழுதை சரிசெய்ய முடியும் என்ற நிலை ஏற்பட்டது.

இந்த இக்கட்டான நிலையை கருத்தில் கொண்ட ரெயில்வே அதிகாரிகள், கோவை பாசஞ்சர் ரெயிலில் பழுதடைந்த என்ஜினுக்கு பதிலாக மாற்று என்ஜின் பொருத்தி மீண்டும் இயக்க முடிவு செய்தனர். இதற்காக நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இருந்து உடனடியாக மாற்று என்ஜின் கொண்டு வரப்பட்டது. மாற்று என்ஜின் நாகர்கோவிலில் இருந்து வரவழைக்கப்பட்டதால் கோவை பயணிகள் ரெயிலை முன் இருந்து இழுத்துச் செல்ல இயலவில்லை.

இதனால் ரெயிலை மாற்று என்ஜின் மூலமாக பின்புறத்தில் இருந்து தள்ளி ஆரல்வாய்மொழி ரெயில் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் அங்கு அந்த என்ஜினை கழற்றி, முன்புறமாக கொண்டு சென்று ரெயிலில் இணைக்கப்பட்டது. பழுதடைந்த என்ஜின் தனியாக கழற்றப்பட்டு வேறு ஒரு இடத்தில் தனியாக நிறுத்தப்பட்டது. அதன் பின்னரே காலை 10.30 மணி அளவில் ஆரல்வாய்மொழி ரெயில் நிலையத்தில் இருந்து கோவை பாசஞ்சர் ரெயில் புறப்பட்டது.

இந்த ரெயில் வழக்கமாக ஆரல்வாய்மொழி ரெயில் நிலையத்தில் இருந்து காலை 7.30 மணிக்கு புறப்படும். ஆனால் நேற்று என்ஜின் கோளாறு ஏற்பட்டதால் 3 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது குறிப்பிடத்தக்கது.

நாகர்கோவிலில் இருந்து நெல்லை மார்க்கமாக செல்லும் ரெயில்கள் தோவாளை, ஆரல்வாய்மொழி வழியாகத்தான் செல்ல முடியும். வேறு ரெயில் பாதை இல்லை. கோவை பாசஞ்சர் ரெயில் நடுவழியில் நின்றதால் அந்த நேரத்தில் நாகர்கோவிலுக்கு வரவேண்டிய அனந்தபுரி எக்ஸ்பிரஸ் மற்றும் பெங்களூர்-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்களால் குறித்த நேரத்துக்கு வர இயலவில்லை.

அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் பணகுடியிலும், பெங்களூர்-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ஆரல்வாய்மொழியிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. கோவை பாசஞ்சர் ரெயில் புறப்பட்ட பிறகு தான் ஆரல்வாய்மொழியில் நின்ற பெங்களூர்-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் நாகர்கோவிலுக்கு புறப்பட்டது. இந்த ரெயில் கோட்டார் ரெயில் நிலையத்துக்கு காலை 7.50 மணிக்கு வருவது வழக்கம். ஆனால் நேற்று 2 மணி நேரம் 10 நிமிடம் தாமதமாக அதாவது 10 மணிக்கு வந்தது.

இதே போல் பணகுடியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று ஒரு மணி நேரம் தாமதமாக 10.40 மணிக்கு நாகர்கோவில் வந்தது. ரெயில்கள் தாமதத்தால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். 

Next Story