சிறுபான்மை மக்களை மத்திய அரசு நசுக்குகிறது நாராயணசாமி குற்றச்சாட்டு


சிறுபான்மை மக்களை மத்திய அரசு நசுக்குகிறது நாராயணசாமி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 24 Jan 2018 4:00 AM IST (Updated: 24 Jan 2018 4:08 AM IST)
t-max-icont-min-icon

சிறுபான்மை மக்களை மத்திய அரசு நசுக்குகிறது என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டினார்.

புதுச்சேரி,

ஹஜ் மானியம் ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுவை தலைமை தபால் நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சிறுபான்மை பிரிவு தலைவர் முகமது ஹாசன் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் முதல்- அமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு பேசியதாவது:-

இந்திய மதச்சார்பற்ற நாடு. ஆனால் இப்போது இங்கு சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இல்லை. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் இந்த பாதுகாப்பு இருந்தது. மதக்கலவரத்தை ஏற்படுத்தி வாக்குகளை பெறுவதே இவர்களது கொள்கையாக உள்ளது. இதில் அவர்கள் பலமுறை வெற்றியும் பெற்றுள்ளனர்.

குறிப்பாக உத்தரபிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இதுபோன்று நடந்துள்ளது. இது வெகு காலத்திற்கு நடக்காது. ராமர்கோவிலை கட்டுவோம் என்று கூறி வாக்குகளை வாங்குவார்கள். வாஜ்பாய் காலத்தில் இருந்தே இதைத்தான் சொல்லி வருகிறார்கள்.

கடும் எதிர்ப்பு

மாட்டுக்கறி சாப்பிட தடை என்றார்கள். வீடுகளில் அமர்ந்து பைபிள் வாசிக்கும் கிறிஸ்தவர்களின் பைபிளை கிழித்து எறிந்தார்கள். சிறுபான்மை மக்களை திட்டமிட்டு தாக்குகிறார்கள். முத்தலாக் விவகாரத்தில் அந்த சமுதாய மக்களின் கருத்தை கேட்கவில்லை. இப்போது ஹஜ் மானியத்தை ரத்து செய்துள்ளார்கள்.

முத்தலாக் சட்டம் தொடர்பாக பாராளுமன்ற மக்களவையில் மசோதாவை நிறைவேற்றிவிட்டார்கள். மேலவையில் அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அந்த மசோதாவை நிலைக்குழுவுக்கு அனுப்பவேண்டும் என்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தின. ஆனால் அதை ஏற்கவில்லை.

நசுக்கும் செயல்

ஹஜ் யாத்திரை செல்வதை முஸ்லிம்கள் புனிதமாக கருதுகின்றனர். ஆனால் அதற்காக வழங்கப்பட்டு வந்த மானியத்தை ரத்து செய்துள்ளார்கள். 2019-ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் ஆட்சி வந்ததும் அதை நாங்கள் வழங்குவோம். சிறுபான்மை மக்களை நசுக்கும் செயலை பாரதீய ஜனதா செய்து வருகிறது.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசினார்.

அமைச்சர் நமச்சிவாயம்

ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சி தலைவரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான நமச்சிவாயம் பேசியதாவது:-

மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா அரசு மாற்றம் என்ற பெயரில் மக்களுக்கு பல்வேறு இன்னல்களை தருகிறது. புதுப்புது சட்டங்களை கொண்டு வருகிறார்கள். தற்போது ஹஜ் பயணத்துக்கான மானியத்தை ரத்து செய்துள்ளார்கள். குறுகிய மனப்பான்மையுடன் மத்திய ஆட்சி நடக்கிறது.

நான் எதை உண்பது என்பதைக்கூட அவர்கள் முடிவு செய்ய நினைக்கிறார்கள். அந்த உரிமை அவர்களுக்கு கிடையாது. சிறுபான்மை மக்களுக்கு பாதுகாவலனாக காங்கிரஸ் உள்ளது. என்றும் சிறுபான்மையினருடன் காங்கிரஸ் இருக்கும்.

முஸ்லிம் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கவே முத்தலாக் சட்டம் என்று பிரதமர் கூறுகிறார். அவர் தனது மனைவிக்கு கூட பாதுகாப்பு வழங்கவில்லை. நாட்டு மக்களுக்கு எப்படி பாதுகாப்பு வழங்கப்போகிறார்?

இவ்வாறு அமைச்சர் நமச்சிவாயம் பேசினார்.

அமைச்சர்கள்

ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர்கள் மல்லாடிகிருஷ்ணாராவ், கந்தசாமி, ஷாஜகான், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், அனந்தராமன், ஜெயமூர்த்தி, தீப்பாய்ந்தான், முன்னாள் முதல்-அமைச்சர் ராமச்சந்திரன், நிர்வாகிகள் ஏ.கே.டி.ஆறுமுகம், நீல.கங்காதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story