திருமண ஆசைகாட்டி பல கோடி ரூபாய் மோசடி: நடிகை சுருதி மீது மேலும் ஒரு வழக்கு


திருமண ஆசைகாட்டி பல கோடி ரூபாய் மோசடி: நடிகை சுருதி மீது மேலும் ஒரு வழக்கு
x
தினத்தந்தி 25 Jan 2018 4:00 AM IST (Updated: 25 Jan 2018 1:07 AM IST)
t-max-icont-min-icon

திருமண ஆசை காட்டி பல கோடி ரூபாய் மோசடி செய்த நடிகை சுருதி மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்ய கோவை போலீசார் முடிவு செய்துள்ளனர்.

கோவை,

கோவை பாப்பநாயக்கன்பாளையம் தனலட்சுமி நகரை சேர்ந்தவர் சுருதி (வயது 21). இவர் ‘ஆடி போனா ஆவணி’ என்ற சினிமாவில் நடித்து உள்ளார். ஆனால் அந்த சினிமாப்படம் இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில் சுருதி, என்ஜினீயர்கள், பணக்கார வாலிபர்களிடம் திருமண ஆசைகாட்டி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது.இதன்பேரில் கோவை சைபர் கிரைம் போலீசார் சுருதி, உடந்தையாக இருந்ததாக அவருடைய தாய் சித்ரா, தம்பி சுபாஷ், உறவினர் பிரசன்ன வெங்கடேஷ் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

நடிகை சுருதி உள்பட 4 பேரையும் தனிப்படை போலீசார் 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்களின் போலீஸ் காவல் இன்று(வியாழக்கிழமை) முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து அவர்கள் கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள்.

நடிகை சுருதியிடம் விசாரணை நடத்தப்பட்டது குறித்து தனிப்படை போலீசார் கூறியதாவது:-

நடிகை சுருதி மோசடி பணத்தில் அசையா சொத்துக்கள் எதுவும் வாங்கவில்லை என்று தெரியவந்துள்ளது. திருமண ஆசை காட்டி பல வாலிபர்களிடம் மோசடி செய்யப்பட்ட லட்சக்கணக்கான ரூபாய் பணத்தில் அவர் ஆடம்பரமாக வாழ்ந்துள்ளார். வெளியூர்களுக்கு செல்லும் போது நட்சத்திர ஓட்டல்களில் தான் சுருதி தங்கியுள்ளார். பல வாலிபர்களிடமிருந்து வங்கி மூலமும், ரொக்கமாகவும் சுருதி பணத்தை பெற்றுள்ளார்.

நடிகை சுருதி மீது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மோசடி வழக்குகள் பதிவாகி உள்ளன. இதில் கோவையை சேர்ந்த பாலமுருகன் கொடுத்த புகாரின் பேரில் தான் தற்போது போலீசார் சுருதி உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த 2016-ம் ஆண்டு நடிகை சுருதி மீது திருமண ஆசை காட்டி பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக சந்தோஷ் குமார் என்பவர் புகார் செய்துள்ளார். அந்த புகாரின் மீது விரைவில் வழக்குப்பதிவு செய்து சுருதியை கைது செய்ய உள்ளோம்.

சுருதி மீது சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் புகார்கள் கூறப்பட்டிருந்தாலும் அது தொடர்பாக வழக்குகள் எதுவும் இதுவரை பதிவு செய்யப்படவில்லை. எனவே வெளிமாவட்ட போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பின்னர் கோவை வந்து சுருதியை கைது செய்வார்கள். அதன்பின்னர் அவர்கள் போலீஸ் காவல் கேட்டு கோர்ட்டின் அனுமதி பெற்று சுருதியை விசாரணைக்காக அழைத்துச் செல்வார்கள்.

கோவையில் பதிவான வழக்கு தொடர்பாக போலீஸ் காவல் முடிந்து சுருதியை கோர்ட்டில் ஒப்படைத்த பின்னர் வெளிமாவட்ட போலீசார் கோவை வருவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story