பஸ் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி திருச்சியில் மாணவர்கள் தொடர்போராட்டம்


பஸ் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி திருச்சியில் மாணவர்கள் தொடர்போராட்டம்
x
தினத்தந்தி 25 Jan 2018 4:30 AM IST (Updated: 25 Jan 2018 1:23 AM IST)
t-max-icont-min-icon

பஸ் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி திருச்சியில் மாணவர்கள் நேற்றும் போராட்டம் நடத்தினார்கள். தொடர்ந்து அரசு பணிமனையை மாணவர்கள் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி,

பஸ் கட்டண உயர்வை கண்டித்தும், அதை திரும்ப பெற வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள், அரசியல் கட்சியினர், மாணவ-மாணவிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் திருச்சியிலும் நடந்து வருகிறது. திருச்சியில் நேற்று 3-வது நாளாக போராட்டம் நடைபெற்றது. நேற்று மதியம் 3 மணிக்கு திருச்சி அரசு சட்டக்கல்லூரி மாணவ-மாணவிகள் பலர் கல்லூரி நுழைவு வாசல் முன்பு கூடினர். பின்னர் பஸ் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு டி.வி.எஸ். டோல்கேட் நோக்கி வந்தனர்.

ஜமால் முகமது கல்லூரி அருகே வந்த போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதைத்தொடர்ந்து கல்லூரி முன்பு சாலையில் நின்ற படி தமிழக அரசை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர். அப்போது மாணவர்கள் சிலர் போலீசாரின் தடுப்பை மீறி டி.வி.எஸ். டோல்கேட்டில் உள்ள அரசு பணிமனையை முற்றுகையிட செல்ல முயன்றனர். அவர்களை போலீஸ் உதவி கமிஷனர் பாலமுருகன் தலைமையில் போலீசார் தடுத்து நிறுத்தினர்.

எச்சரிக்கை

போலீசார் மாணவர்களிடம், “போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி இதுவரை ஊர்வலமாக வந்து போராட்டம் நடத்தினீர்கள். இதற்கு மேலும் போராட்டம் நடத்த முயன்றால் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடைஞ்சல் ஏற்படும். மீறி போராட்டம் நடத்தினால் சட்ட விரோதம். எனவே மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லுங்கள்” என்றனர்.

ஆனால் மாணவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பஸ் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி டி.வி.எஸ்.டோல்கேட்டில் உள்ள அரசு பணிமனை முன்பு முற்றுகை போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

22 பேர் கைது

அதற்கு போலீசார் மறுப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மாணவ-மாணவிகள் சிலர் போலீசாரின் தடுப்பை மீறி பணிமனைக்கு செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் மீண்டும் தடுத்தனர். அப்போது போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. சிலர் அங்கேயே சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து 4 மாணவிகள் உள்பட 22 பேரை போலீசார் கைது செய்தனர். ஒரு சில மாணவர்களை போலீசார் குண்டு, கட்டாக தூக்கி போலீஸ் வேனில் ஏற்றினர்.

அதே போன்று மறியலில் ஈடுபட்டவர்களையும் போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்து வேனில் ஏற்றினர். அப்போது மாணவ-மாணவிகள் போலீசாரை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இது குறித்து கைது செய்யப்பட்டவர் மாணவர்கள் கூறும் போது, “எங்களை கைது செய்தது கண்டிக்கத்தக்கது. நாளை (இன்று) தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் தொடரும்” என்று கூறினர்.

இதனால் சம்பவ இடத்தில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது. மேலும் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அரசு கலைக்கல்லூரி

இதே கோரிக்கையை வலியுறுத்தி திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று 2-வது நாளாக வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி நுழைவு வாசல் முன்பு அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பஸ் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோஷங்களை எழுப்பி னர். இதே போன்று திருச்சி தேசிய கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்த கல்லூரி முன்பு திரண்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து போராட்டம் நடத்தாமல் அனைவரும் கலைந்து சென்றனர்.

அனைத்திந்திய மாணவர் பெரு மன்றம்

இதே போன்று அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் சிலர் நேற்று மாலை திடீரென்று திருச்சி மத்திய பஸ் நிலையம் நோக்கி ஓடி வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால் தடுப்பை மீறி அவர்கள் அங்கு வந்த ஒரு அரசு டவுன் பஸ் முன்பு படுத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து 2 மாணவிகள் உள்பட 12 பேரை போலீசார் கைது செய்தனர்.

போராட்டங்களில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் அனைவரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர். 

Next Story