சுசீந்திரத்தில் சாலையை சீரமைக்க கோரி வீடு, வீதிகளில் கருப்பு கொடி கட்டி போராட்டம்


சுசீந்திரத்தில் சாலையை சீரமைக்க கோரி வீடு, வீதிகளில் கருப்பு கொடி கட்டி போராட்டம்
x
தினத்தந்தி 25 Jan 2018 4:30 AM IST (Updated: 25 Jan 2018 1:23 AM IST)
t-max-icont-min-icon

சுசீந்திரத்தில் சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் வீடு, வீதிகளில் கருப்பு கொடி கட்டி போராட்டம் நடத்தினர். மேலும், கடைகள் அடைக்கப்பட்டன.

சுசீந்திரம்,

சுசீந்திரம், அக்கரையில் இருந்து தேரூர் வரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் சாலை மிகவும் குறுகலாக இருந்தது. இதை விரிவுபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலை விரிவாக்கம் பணி தொடங்கியது. இதையடுத்து அந்த வழியாக சென்று வந்த வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.

ஆனால், பணியை முழுமையாக முடிக்காமல் பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால், அந்த பகுதி மக்கள் போக்குவரத்து வசதியின்றி மிகவும் அவதியடைந்தனர்.

ஒகி புயல் சேதம்

இதையடுத்து சாலையை சீரமைக்க வலியுறுத்தி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அப்போது, பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் சாலையை உடனே சீரமைப்பதாக உறுதி அளித்தனர். அத்துடன் சாலை சீரமைப்பு பணி தொடங்கப்பட்டது. ஆனால், முழுமை அடையவில்லை. இந்தநிலையில் ஒகி புயலில் இந்த சாலை மீண்டும் பழுதடைந்தது.

இந்த சாலை வழியாக கனரக வாகனங்கள் செல்லும்போது, தூசும், புழுதியும் பறப்பதால் சாலையோர உள்ள வீடுகளில் வசிப்பவர்களும், கடைகளில் வியாபாரம் செய்பவர்களும் மிகவும் அவதியடைந்து வருகிறார்கள். இதுகுறித்து அதிகாரிகளுக்கு பல முறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கருப்பு கொடி கட்டி போராட்டம்

இதையடுத்து சாலை சீரமைப்பு பணியை விரைவில் முடிக்க கோரி நேற்று சுசீந்திரம் அக்கரை பகுதியில் பொதுமக்கள் வீடுகளின் முன்பும், வீதிகளிலும் கருப்பு கொடி கட்டி நூதன போராட்டம் நடத்தினர். அத்துடன் வியாபாரிகளும் கடைகளை அடைத்து கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி, நேற்று அக்கரை பகுதியில் டீக்கடைகள், பேக்கரி, மளிகை கடைகள் உள்பட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

சாலைபணியை விரைவில் முடிக்கவில்லை எனில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். 

Next Story