தி.மு.க. ஒன்றிய செயலாளர் திடீர் மாயம்; கடத்தப்பட்டாரா? போலீசில் மனைவி புகார்


தி.மு.க. ஒன்றிய செயலாளர் திடீர் மாயம்; கடத்தப்பட்டாரா? போலீசில் மனைவி புகார்
x
தினத்தந்தி 25 Jan 2018 4:45 AM IST (Updated: 25 Jan 2018 3:59 AM IST)
t-max-icont-min-icon

அணைக்கட்டு ஒன்றிய தி.மு.க.செயலாளர் திடீரென மாயமாகியுள்ளதால் அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என போலீஸ் நிலையத்தில் மனைவி புகார் அளித்துள்ளார்.

அணைக்கட்டு,

அணைக்கட்டு ஒன்றிய தி.மு.க. செயலாளராக கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பாபு (வயது 48) பதவி வகித்து வருகிறார். கடந்த 22-ந் தேதி முதல் அவரை காணவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து அவரது மனைவி பிரேமலதா, அணைக்கட்டு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

எனது கணவர் பாபு அணைக்கட்டு ஒன்றிய தி.மு.க. செயலாளராக 10 ஆண்டுகளுக்கு மேலாக பதவி வகித்து வருகிறார். அவர் அணைக்கட்டில் ஒடுகத்தூர் செல்லும் சாலையில் கம்பி மற்றும் சிமெண்டு விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார்.

எங்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். எங்களது வீடு காட்பாடியில் உள்ளது. எனது மகள் நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருவதால் நான் மகளுடன் தங்கி உள்ளேன்.

எனது கணவர் காட்பாடியில் உள்ள வீட்டில் மகனுடன் தங்கியுள்ளார். கடந்த 22-ந் தேதி இரவு 8 மணியளவில் அணைக்கட்டில் கடையில் இருந்த என் கணவரிடம் தொலைபேசியில் பேசினேன். “மகன் தனியாக உள்ளான். உடனடியாக வீட்டிற்கு செல்லுங்கள்” என நான் கேட்டுக் கொண்டேன். பின்னர் அவர் வீட்டுக்கு சென்று விட்டாரா? என்பதை உறுதி செய்வதற்காக 9.30 மணியளவில் தொடர்பு கொண்டபோது அவரது செல்போன் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டிருந்தது.

நான் உடனே வீட்டில் இருக்கும் என் மகனிடம் போனில் தொடர்பு கொண்டு “அப்பா வந்துவிட்டாரா?” என்று கேட்டேன். அதற்கு “அப்பா இன்னும் வீட்டிற்கு வரவில்லை” என்று பதில் கூறினான். இது சம்பந்தமாக என் கணவரின் நண்பர்களிடம் நான் போனில் கேட்டபோது அவர் ஏற்கனவே கடையை பூட்டிவிட்டு சென்று விட்டார்” என்றனர்.

குழப்பத்தில் நான் இருந்த நிலையில் மறுநாள் காலை 23-ந் தேதி எனது கணவர் பாபு என் போனில் தொடர்பு கொண்டு “ரெயிலில் வருகிறேன், சீக்கிரம் வீட்டிற்கு சென்று விடுவேன்” என்று கூறி போனை ‘கட்’ செய்து விட்டார். பின்னர் மீண்டும் அவரை நான் தொடர்பு கொள்ள முயன்றபோது முடியவில்லை. பலமுறை செல்போனில் அழைத்தபோது ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டுள்ளதாக தகவல் வந்தது.

எனவே எனது கணவரை யாராவது கடத்தி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது. எனவே எனது கணவரை மீட்டுத்தர வேண்டும்.

இவ்வாறு அவர் அதில் கூறியிருந்தார்.

அவரது புகாரை ஏற்ற அணைக்கட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் வழக்குப்பதிவு செய்தார். பாபு மாயமாகியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் கடத்தப்பட்டாரா? அல்லது அவராகவே சென்றாரா? இல்லையெனில் வேறு ஏதும் இதில் மர்மம் உள்ளதா? என்பது தெரியவில்லை. அது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி அவரை தேடி வருகின்றனர். 

Next Story