உரக்கடை உரிமையாளர் வீட்டில் 10 பவுன் நகை, ரூ.80 ஆயிரம் திருட்டு


உரக்கடை உரிமையாளர் வீட்டில் 10 பவுன் நகை, ரூ.80 ஆயிரம் திருட்டு
x
தினத்தந்தி 25 Jan 2018 3:45 AM IST (Updated: 25 Jan 2018 4:02 AM IST)
t-max-icont-min-icon

ஆலத்தூர்கேட்டில் உரக்கடை உரிமையாளர் வீட்டில் 10 பவுன் நகை மற்றும் ரூ.80 ஆயிரத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பாடாலூர்,

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா ஆலத்தூர்கேட் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் அதே பகுதியில் உரக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி லோகிஷா. இவர்கள் இருவரும் அதே பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று அதிகாலையில் மாடியில் உள்ள அறையில் உள்ள மேஜையில் லோகிஷா தான் அணியும் தங்க செயின் மற்றும் வளையலை கழட்டி வைத்து விட்டு வாசலில் கோலம் போடுவதற்காக கீழே இறங்கி வந்துள்ளார். ரவிச்சந்திரன் வெளியில் சென்று விட்டார்.

நகை-பணம் திருட்டு

பின்னர் கோலம் போட்டு விட்டு லோகிஷா வீட்டின் அறைக்கு சென்றார். அங்கு மேஜையில் கழட்டி வைத்த நகைகள் மற்றும் பணத்தை காணாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் வீட்டில் உள்ள அனைத்து இடங்களிலும் தேடி பார்த்தும் நகை-பணம் கிடைக்க வில்லை. அப்போது தான் வீட்டில் நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் உள்ளே சென்று, தங்க செயின் மற்றும் வளையல் உள்ளிட்ட 10 பவுன் நகை மற்றும் மேஜை மீது வைக்கப்பட்டிருந்த ரூ.80 ஆயிரத்தை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ரவிச்சந்திரன் பாடாலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை- பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story