இந்திய மாணவர் சங்க நிர்வாகிகளை விடுதலை செய்ய கோரி ஆர்ப்பாட்டம் 15 பேர் கைது
இந்திய மாணவர் சங்க நிர்வாகிகளை விடுதலை செய்ய கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் 15 பேர் கைது
தஞ்சாவூர்,
தமிழகத்தில் உயர்த்தப்பட்டுள்ள பஸ் கட்டணத்தை தமிழகஅரசு திரும்ப பெற கோரியும், அரசு பஸ்கள் கண்ணாடியை உடைக்க திட்டமிட்டதாக இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் அரவிந்தசாமி, இணைச் செயலாளர் சசிகுமார் ஆகியோர் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை போலீசார் திரும்ப பெற்று அவர்களை உடனே விடுதலை செய்ய வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தஞ்சை சிவகங்கை பூங்கா அருகே நேற்றுமாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை.
அனுமதியின்றி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். இதில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் சரவணன், சிவக்குமார், ராஜன், மாநகரக்குழு உறுப்பினர்கள் குருசாமி, துரை, ராஜன், சுந்தர், அப்துல்நசீர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பின்னர் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பெண் ஒருவர் உள்பட 15 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர்.