பஸ் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி மாட்டு வண்டியுடன் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்


பஸ் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி மாட்டு வண்டியுடன் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 Jan 2018 4:15 AM IST (Updated: 26 Jan 2018 2:50 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு பஸ் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி மாட்டு வண்டியுடன் பா.ம.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்ட பா.ம.க. சார்பில் பஸ் கட்டண உயர்வை கண்டித்தும், கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரியும் தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாநில துணைத்தலைவர் செந்தில்குமார் முதலியார் தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச்செயலாளர் எஸ்.பி.வெங்கடேஷ் வரவேற்றார். தமிழ்நாடு உழவர் பேசியக்க மாநில செயலாளர் வேலுச்சாமி, மாநில துணைத்தலைவர்கள் பாடிசெல்வம், சாந்தமூர்த்தி, குமரன், அரசாங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், தமிழக மக்களை மிகவும் பாதிப்படைய செய்யும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள பஸ் கட்டண உயர்வை தமிழக அரசு உடனடியாக ரத்துசெய்ய வேண்டும். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பான்பராக், குட்கா ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மாட்டுவண்டியுடன்...

பஸ் கட்டண உயர்வை கண்டித்து நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பா.ம.க.வினர் தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள். பழங்காலத்தில் போக்குவரத்திற்கு பயன்படுத்தப்பட்ட மாட்டு வண்டியை ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்தில் கொண்டு வந்து நிறுத்தி நூதன முறையில் பஸ் கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ம.க மாவட்ட செயலாளர்கள் சண்முகம், இமயவர்மன், பசுமைத்தாயக மாவட்ட அமைப்பாளர் மாது, வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் பெரியசாமி, மாவட்ட துணை செயலாளர் டி.ஜி.மணி, தொகுதி அமைப்பு செயலாளர் சுப்ரமணியன், வன்னியர் சங்க மாவட்ட தலைவர் பாலாஜி, மாவட்ட துணை செயலாளர் பாலகிருஷ்ணன் மற்றும் கட்சி நிர்வாகிகள், சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள், பெண்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் செல்வராஜ் நன்றி கூறினார். 

Next Story