தொழிற்சங்கங்கள் சார்பில் நடந்த சிறை நிரப்பும் போராட்டத்தில் பங்கேற்ற 244 பேர் கைது


தொழிற்சங்கங்கள் சார்பில் நடந்த சிறை நிரப்பும் போராட்டத்தில் பங்கேற்ற 244 பேர் கைது
x
தினத்தந்தி 26 Jan 2018 4:30 AM IST (Updated: 26 Jan 2018 2:52 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் தொழிற்சங்கங்கள் சார்பில் நடந்த சிறை நிரப்பும் போராட்டத்தில் பங்கேற்ற 244 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாகர்கோவில்,

ஏழை மற்றும் நடுத்தர தொழிலாளர்களை பாதிக்கும் வகையிலான பணமதிப்பு நீக்க நடவடிக்கை, ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு, கடுமையான விலை உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் ஏற்பட்டுள்ளதற்கு காரணமான மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தும், தொழிலாளர் நல சட்டங்களை தொழிலாளர்களுக்கு எதிராக திருத்துவது அல்லது சுருக்குவது போன்ற நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபடுவதை கண்டித்தும், தமிழக அரசு உயர்த்தியுள்ள பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று சிறை நிரப்பும் போராட்டம் நடந்தது.

இதேபோல் குமரி மாவட்டத்தில் ஐ.என்.டி.யூ.சி., சி.ஐ.டி.யூ., எல்.பி.எப்., எச்.எம்.எஸ்., ஏ.ஐ.டி.யூ.சி., ஏ.ஐ.சி.சி.டி.யூ., எம்.எல்.எப். உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகம் முன் மறியல் போராட்டம் நடந்தது. முன்னதாக போராட்ட விளக்க கூட்டம் கலெக்டர் அலுவலகம் முன் நடந்தது. இதற்கு ஐ.என்.டி.யூ.சி. மாவட்ட தலைவர் அனந்தகிருஷ்ணன், சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் தங்கமோகனன், எல்.பி.எப். மாவட்ட தலைவர் ஞானதாஸ், எச்.எம்.எஸ். மாவட்ட செயலாளர் முத்துக்கருப்பன், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் அனில்குமார், எம்.எல்.எப்., மாவட்ட தலைவர் மகராஜபிள்ளை, ஏ.ஐ.சி.சி.டி.யூ. மாநில துணைத்தலைவர் சுசீலா ஆகியோர் தலைமை தாங்கினர்.

குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ., நகர செயலாளர் வக்கீல் மகேஷ், முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன், தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் இளங்கோ, ஆமோஸ், லட்சுமணன், அந்தோணி, அந்தோணிமுத்து, இசக்கிமுத்து, துரைராஜ், லெட்சுமணன், விவேகானந்தன் உள்பட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

இதில் பல்வேறு தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் விஜயகுமார், வட்டவிளை முருகேசன், வைகுண்டதாஸ், செலஸ்டின், அலெக்சாண்டர், மேரி ஸ்டெல்லா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலக பிரதான நுழைவு வாயில் முன் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன.  உடனே அங்கு பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த போலீசார் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்ட 88 பெண்கள் உள்பட 244 பேர்களை கைது செய்தனர். பின்னர் அவர்களை போலீஸ் வாகனங்களில் ஏற்றி நாகர்கோவில் மத்தியாஸ் வார்டு பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர். மாலையில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த போராட்டத்தையொட்டி கலெக்டர் அலுவலகத்தில் போலீஸ் உதவி சூப்பிரண்டு ஜவகர் தலைமையில் துணை சூப்பிரண்டு கோபி, இன்ஸ்பெக்டர்கள் அன்பு பிரகாஷ், சாய்லெட்சுமி, போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு இன்ஸ்பெக்டர் அருள் ஜாண் ஒய்ஸ்லின்ராஜ் மற்றும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். போராட்டக்காரர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றபோது கலெக்டர் அலுவலக பிரதான நுழைவு வாயில் கேட் பூட்டப்பட்டது.


Next Story