அனைத்து தொழிற்சங்கத்தினர் மறியல் 155 பேர் கைது


அனைத்து தொழிற்சங்கத்தினர் மறியல் 155 பேர் கைது
x
தினத்தந்தி 26 Jan 2018 3:37 AM IST (Updated: 26 Jan 2018 3:37 AM IST)
t-max-icont-min-icon

கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 155 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் உழவர் சந்தை அருகே நேற்று திருவள்ளூர் மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் ஜெயபால், ஏ.எஸ்.கண்ணன், முகமதுமீரான், தயாளன் ஆகியோர் தலைமை தாங்கினர். அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் கஜேந்திரன், வேலுச்சாமி, நாகூர்கனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அப்போது 100–க்கும் மேற்பட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் திடீரென தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன கோ‌ஷங்கள் எழுப்பியவாறு திருவள்ளூர்–திருப்பதி நெடுஞ்சாலையான உழவர் சந்தை அருகே சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும், எந்தவித விதிவிலக்கும் இன்றி அனைத்து அடிப்படை தொழிலாளர் சட்டங்கள் முனைப்புடன் அமலாக்கப்படவேண்டும், லாபம் ஈட்டும் மத்திய மாநில பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனையை உடனடியாக நிறுத்த வேண்டும், அனைத்து தரப்பு தொழிலாளர்களுக்கும் உறுதி செய்யப்பட்ட குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூபாய் 3 ஆயிரம் வழங்க வேண்டும், தொழிலாளர் சட்டங்களில் தன்னிச்சையான திருத்தங்கள் செய்யக்கூடாது என்பது உட்பட 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.

இதனால் அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் சாலையின் இருபுறமும் அணிவகுத்து நின்றன. அப்போது அங்கிருந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட 30 பெண்கள் உட்பட 155 பேரை கைது செய்து திருவள்ளூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். மாலையில் அனைவரையும் விடுவித்தனர். மறியல் காரணமாக அங்கு ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story