சேலம் அருகே வியாபாரியிடம் 500 கிலோ வெள்ளிக்கட்டி மோசடி; வாலிபர் கைது


சேலம் அருகே வியாபாரியிடம் 500 கிலோ வெள்ளிக்கட்டி மோசடி; வாலிபர் கைது
x
தினத்தந்தி 26 Jan 2018 5:03 AM IST (Updated: 26 Jan 2018 5:03 AM IST)
t-max-icont-min-icon

சேலம் அருகே வியாபாரியிடம் 500 கிலோ வெள்ளிக்கட்டி மோசடி செய்த வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார். 3 நண்பர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.

சேலம்,

சேலம் அருகே உள்ள இனாம்வேடுகாத்தாம்பட்டியை சேர்ந்தவர் செல்வபிரகாஷ்(வயது35). இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து வெள்ளிக்கட்டி வியாபாரம் செய்து வருகிறார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கரூரை சேர்ந்த விக்னேஷ், சதீஷ், ராமச்சந்திரன், சக்திவேல் ஆகிய 4 பேர் வெள்ளிக்கட்டிகளை விலைக்கு கேட்டனர். இவர்களில் சக்திவேல் கரூரில் வெள்ளி வியாபாரம் செய்து வருகிறார்.

அதைத்தொடர்ந்து செல்வபிரகாஷ் தனது நண்பர் களுடன் சேர்ந்து 500 கிலோ வெள்ளிக்கட்டியை கொடுத்தனர். அதன் மதிப்பு ரூ.1 கோடியே 25 லட்சம் என கூறப்படுகிறது. ஆனால், 4 பேரும் வெள்ளிக்கட்டிக்கான பணத்தை கொடுக்கவில்லை. குறிப்பிட்ட நாட்கள் கால அவகாசம் கேட்டு வாங்கி சென்றதாக கூறப்படுகிறது.

ஆனால், குறித்த காலம் முடிந்த பின்னரும் வெள்ளிக்கட்டிக்கான பணத்தை 4 பேரும் கொடுக்கவில்லை. இதனால், செல்வபிரகாஷ் மற்றும் அவரது நண்பர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. பின்னர் கரூரில் உள்ள சக்திவேலின் வெள்ளி கடைக்கு சென்றனர். அங்கு கடை மூடப்பட்டிருந்தது.

சக்திவேல் உள்பட 4 பேரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது, அவை ‘சுவிட்ச் ஆப்‘ செய்யப்பட்டிருந்தது. எனவே, தாங்கள் ஏமாந்து விட்டதை அறிந்து சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சங்கரிடம் புகார் கொடுத்தனர். அதன்பேரில், அவர் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேலை விசாரிக்க உத்தரவிட்டார்.

அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைக்கப்பட்டு மோசடி பேர்வழிகள் 4 பேரையும் தேடிவந்தனர்.

இந்த நிலையில் கரூரை சேர்ந்த விக்னேஷ்(29) என்பவரை நேற்று போலீசார் கைது செய்தனர். மேலும் அவரது காரும் பறிமுதல் செய்யப்பட்டது. தலைமறைவான சக்திவேல், சதீஷ், ராமச்சந்திரன் ஆகிய 3 பேரையும் பிடித்தால் மட்டுமே வெள்ளிக்கட்டியை யாரிடம் விற்பனை செய்து மோசடி செய்தார்கள் என்ற விவரம் தெரியவரும். போலீசார் தொடர்ந்து விக்னேசின் நண்பர்கள் 3 பேரையும் தேடி வருகிறார்கள்.

Next Story