பாளையங்கோட்டையில் சைவ சமய மாநாடு: தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்க வேண்டும் பழ.நெடுமாறன் பேச்சு
தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையில் நடந்த சைவ சமய மாநாட்டில் பழ.நெடுமாறன் பேசினார்.
நெல்லை,
தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையில் நடந்த சைவ சமய மாநாட்டில் பழ.நெடுமாறன் பேசினார்.
சைவ சமய மாநாடுபாளையங்கோட்டை சைவ சபையின் சார்பில் சைவ சமய மாநாடு பாளையங்கோட்டை நேருஜி சிறுவர் கலையரங்கத்தில் நேற்று தொடங்கியது. ஊரன் அடிகள் தலைமை தாங்கி, மாநாட்டை தொடங்கி வைத்தார். சைவ சபை தலைவர் வள்ளிநாயகம் வரவேற்று பேசினார். பழ.நெடுமாறன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தாய் மொழி வழிக்கல்வி என்ற தலைப்பில் பேசினார்.
அப்போது, அவர் பேசியதாவது:–
தாய் மொழி கல்விசுதந்திர போராட்ட காலத்தில் தாய் மொழி கல்வி வேண்டும் என்ற குரல் நாடு முழுவதும் ஒலித்தது. இதன் விளைவாக தமிழகத்தில் தாய் வழிக்கல்விக்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டது. 1968–ம் ஆண்டு 2–வது பயிற்று மொழியாக ஆங்கிலத்தை சேர்த்து அரசாணை வெளியிடப்பட்டது. 1971–ம் ஆண்டு குழந்தைகளின் பெற்றோர்கள் விருப்பத்திற்கு ஏற்ப கல்வி மொழி அமைக்கப்பட வேண்டும் என ஒரு குழு பரிந்துரை செய்தது. இதை அரசு ஏற்றது. இதன் காரணமாக ஆங்கில வழி கல்விமுறை பரவிவிட்டது.
தற்போது அரசு பள்ளிகளில் கூட ஒரு பிரிவு ஆங்கில வழி கல்வி உருவாகி விட்டது. நமது அண்டை மாநிலங்களான கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் அந்ததந்த மொழிகளிலேயே கல்வி கற்க கல்வி மொழி சட்டம் உள்ளது. தமிழகத்தில் அந்த சட்டம் இல்லை. இந்த சட்டத்தை கொண்டுவர எந்த அரசும் தயாராகவும் இல்லை.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள நீட் தேர்வால் தமிழகத்தின் கல்வி உரிமை பாதிக்கப்பட்டு உள்ளது. நீட் தேர்வுக்கு உரிய கேள்விகள் சி.பி.எஸ்.இ. பாடத்தில் இருந்து கேட்கப்பட்டது. இதனால் அந்த பாடத்திட்டத்தில் படிக்காத தமிழக மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.
தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் இருந்த மருத்துவ படிப்புகான இடங்களில் 800 இடங்களில் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் சேர்ந்து படிக்கிறார்கள். ஒரு மருத்துவ மாணவருக்கான படிப்பு செலவு ரூ.15 லட்சத்தை அரசு ஏற்கிறது. தமிழ்நாட்டில் படித்த வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் அவர்களுடைய சொந்த மாநிலத்திற்கு சென்று மருத்துவம் பார்ப்பார்கள். இதனால் தமிழக அரசிற்கு என்ன லாபம்.
ஆட்சி மொழிநாட்டிற்கு சுதந்திரம் கிடைத்து 71 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் தமிழ் மொழிக்கு இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லை. தமிழ் ஆங்கிலத்திற்கு இன்னும் அடிமையாகவே உள்ளது. தமிழ் ஆட்சி மொழியாகவும், கல்வி மொழியாவும் இல்லை. தமிழகத்தில் தமிழ் மொழியை ஆட்சி மொழியாக கொண்டு வரவேண்டும். அதற்கு பொதுமக்களாகிய நீங்கள் குரல் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு பழ.நெடுமாறன் கூறினார்.
இதைத்தொடர்ந்து பேராசிரியை ஞானபூங்கோதை, சிவகுமார், சிவசந்திரன், குஞ்சிதபாதம் ஆகியோர் பேசினார்கள். இளைய தருமை ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் நூலை வெளியிட்டு பேசினார்.
மாநாட்டில் சிங்கம்பட்டி ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதி, நல்லாசிரியர் செல்லப்பா, சடகோபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.