நெல்லை, தென்காசியில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
பஸ் கட்டண உயர்வை கண்டித்து நெல்லை, தென்காசியில் தி.மு.க., கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை,
பஸ் கட்டண உயர்வை கண்டித்து நெல்லை, தென்காசியில் தி.மு.க., கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்தமிழக அரசு சமீபத்தில் பஸ் கட்டணத்தை உயர்த்தியது. இதை கண்டித்து பல்வேறு அமைப்பினரும், அரசியல் கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தி.மு.க., கூட்டணி கட்சியினர் தமிழகம் முழுவதும் தலைநகரங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். நெல்லை கிழக்கு, மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் பாளையங்கோட்டை மார்க்கெட் திடலில் காலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் சபாநாயகருமான ஆவுடையப்பன் தலைமை தாங்கி, ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
அவர் பேசுகையில், தமிழ்நாட்டில் உள்ள 23 ஆயிரத்து 500 பஸ்களில் 15 ஆயிரம் பஸ்கள் ஓட முடியாத நிலையில் உள்ளன. பல பஸ்கள் பழுதடைந்து உள்ளன. புதிய பஸ்களாக உள்ள பஸ்கள் விபத்து நிவாரணம் வழங்காமல் கோர்ட்டு உத்தரவால் ஜப்தி செய்யப்பட்டு பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் தான் போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் இயங்குகிறது. இதை சரி செய்யாமல் பஸ் கட்டணத்தை உயர்த்தி மக்களை துன்புறுத்துகிறார்கள். எனவே பஸ் கட்டண உயர்வை உடனே ரத்து செய்ய வேண்டும். இல்லை எனில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.
மாட்டு வண்டியில் வந்த எம்.எல்.ஏ.ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பஸ் கட்டண உயர்வை கண்டித்து ஏ.எல்.எஸ். லட்சுமணன் எம்.எல்.ஏ., மத்திய மாவட்ட செயலாளர் அப்துல்வகாப் ஆகியோர் ஆர்ப்பாட்டத்திற்கு மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் டி.பி.எம்.மைதீன்கான் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. ராமசுப்பு, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அப்பாவு, வேல்துரை, மாலைராஜா, கிருஷ்ணன், அவைதலைவர் சுப.சீத்தாராமன், பகுதி செயலாளர்கள் பூக்கடை அண்ணாத்துரை, நமசிவாயம், விவசாய அணி அமைப்பாளர் பொன்னையா பாண்டியன், விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் சண்முகசுந்தரம், கிழக்கு மாவட்ட அவைதலைவர் கிராகாம்பெல், காங்கிரஸ் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன், எஸ்.கே.எம்.சிவகுமார், மாநில பொதுச்செயலாளர் வானமாலை, ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் நிஜாம், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் காசிவிசுவநாதன், விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் கரிசல்சுரேஷ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் மீரான்மைதீன், மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் உஸ்மான்கான், சமத்துவ மக்கள் கழக நிர்வாகி கணேசன், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் கலைக்கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தென்காசிதென்காசி புதிய பஸ் நிலையம் முன்பு தி.மு.க., கூட்டணி கட்சிகளான இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். நெல்லை மேற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் சிவபத்மநாதன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.பி தங்கவேலு, முன்னாள் எம்.எல்.ஏ. ரசாக், மாவட்ட பொருளாளர் ஷேக் தாவூது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் முகம்மது அபுபக்கர் எம்.எல்.ஏ, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் நெல்லை மேற்கு மாவட்ட தலைவர் பழனி நாடார், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் டேனி அருள் சிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தி.மு.க நகர செயலாளர் சாதிர் வரவேற்றார். மாநில மாணவர் அணி துணை அமைப்பாளர் ஷெரிப், மாநில தீர்மானக்குழு உறுப்பினர் சரவணன் ஆகியோர் பேசினார்கள். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் முகைதீன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். ஆர்ப்பாட்டத்தின் ஈடுபட்டவர்கள் தமிழக அரசை கண்டித்தும், பஸ் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரியும் கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் தி.மு.க., கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர். முடிவில், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் கோமதி நாயகம் நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டத்தின் முடிவில் காதர் முகைதீன் நிருபர்களிடம் கூறுகையில், வருகிற 29–ந் தேதி தி.மு.க. தலைமையில் நடைபெறும் சிறை நிரப்பும் போராட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் கலந்து கொள்ளும் என்றார்.