மழைக்காலத்தில் வீணாகும் தண்ணீரை தடுக்க ரூ.4 கோடியில் நம்பியாற்றின் குறுக்கே தடுப்பணை
நம்பியாறு உற்பத்தியாகி சுமார் 48 கி.மீ தூரம் கிழக்கே பாய்ந்து சென்று ஆத்தரங்கரை பள்ளிவாசல், தோட்டாவிளையில் வங்க கடலில் கலக்கிறது.
திசையன்விளை,
நம்பியாறு உற்பத்தியாகி சுமார் 48 கி.மீ தூரம் கிழக்கே பாய்ந்து சென்று ஆத்தரங்கரை பள்ளிவாசல், தோட்டாவிளையில் வங்க கடலில் கலக்கிறது. நம்பியாற்றின் குறுக்கே 9 அணைக்கட்டுகள் மூலம் நம்பியாற்று நீர் 68 குளங்களுக்கு திருப்பி விடப்பட்டு, 3,672 எக்டேர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
மழைக்காலத்தில் மழைநீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்கும் பொருட்டும், மேலும் கடல்நீர் உட்புகுந்து நிலத்தடிநீர் உப்புநீராக மாறுவதை தடுக்கவும், நம்பியாற்றின் குறுக்கே ஆத்தங்கரைபள்ளி அருகே ரூ.4 கோடியில் தடுப்பணை கட்டப்பட உள்ளது.
இதன் மூலம் அந்த பகுதியில் உள்ள 7 கிராமங்கள் பயன்பெறும். உப்புநீர் நல்ல நீராக மாறும். இத்திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. இன்பதுரை எம்.எல்.ஏ. தலைமை தாங்கி அடிக்கல் நாட்டினார்.
பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஜெயபாலன், ராதாபுரம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் அந்தோணி அமலராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நவ்வலடி சரவணகுமார் வரவேற்றார். விழாவில் திசையன்விளை நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெயக்குமார், ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் முருகேசன், வள்ளியூர் நகர செயலாளர் தவசிமுத்து, துணை செயலாளர் கல்யாணசுந்தரம், நவ்வலடி கிளை செயலாளர் பாலையா, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர்கள் மதன சுதாகரன், மூர்த்தி, பாஸ்கரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.